“இது ஒன்றும் எனக்கு புதிதல்ல..”- அஜித் பவார் பதவியேற்ற பிறகு சரத் பவார் பேட்டி!!
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த முகமாக யார் இருப்பார்கள்? என கேட்டதற்கு கையை உயர்த்தி “சரத் பவார்” என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பதிலளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:- தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியிருந்தார். இப்போது சில எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் மீத இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன என தெளிவாக தெரிகிறது.
இதனால் பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எவ்வாறாயினும், எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன். என்னை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர். நான் நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.