7 கார்களுக்கு 46000 ரூபாய்.. மொத்தமும் போலி இன்சூரன்ஸ் பாலிசி: கடைக்காரரை ஏமாற்றிய ஏஜெண்ட்!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை கலம்பொலி பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் கடை உரிமையாளர் ஒருவரை ஏமாற்றி போலியான வாகன இன்சூரன்ஸ் பாலிசி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடை உரிமையாளர் தனக்கு சொந்தமான 7 கார்களுக்கும் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.46,370 செலுத்தி இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார். அந்த கார்களில் ஒரு கார் சமீபத்தில் விபத்துக்குள்ளானபோது, விபத்து காப்பீடு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது அந்த காரின் இன்சூரன்ஸ் பாலிசி போலியானது என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னிடம் இருந்த மற்ற 6 கார்களின் பாலிசியையும் கொடுத்து சரிபார்க்கச் சொன்னார். அப்போது அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து அவர் நவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காருக்கான பாலிசிகளை கான்சோலி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.