;
Athirady Tamil News

உப்பு துகளை விட மிகச் சிறிய அளவில் இருக்கும் ’ஹேண்ட் பேக்’ – விலை எவ்வளவு தெரியுமா?!!

0

நீங்கள் ஒரு கைப்பை (Hand bag) விரும்பியா? வித விதமான கைப்பைகள் வாங்குவதில் ஆர்வம் உடையவரா? ஒரு கைப்பை வாங்குவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த கைப்பை குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் ஒரு நிபந்தனை… இந்த கைப்பையைக் காண்பதற்கு உங்களிடம் மைக்ரோஸ்கோப் இருக்க வேண்டும்! ஏனென்றால் ஒரு உப்பு துகளுக்கும் குறைவாக மிகவும் நுண்ணிய அளவில், அதன் மொத்த வடிவமைப்பும் இருக்கிறது.

ஒரே ஒரு உப்பு துகளை விட மிக நுண்ணிய அளவில், சிறியதாகக் காணப்படும் இந்த கைப்பை ஏலத்தில் 63,750 டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய். நம்பமுடியவில்லையா? இத்தகைய விசித்திரமான சம்பவம் அமெரிக்காவில்தான் நடந்திருக்கிறது.

”ஒரு ஊசியின் கண் வழியாகச் செல்லும் அளவிற்கு மிகச் சிறியது, இந்த கைப்பை. இதை காண்பதற்கு உங்களுக்கு மைக்ரோஸ்கோப் தேவை” என்று கூறுகிறது இந்த பையை வடிவமைத்த அமெரிக்க கலைக் குழு.

MSCHF என்று அழைக்கப்படும் அமெரிக்க கலைக் குழு, அதன் சர்ச்சைக்குரிய வடிவமைப்புகளுக்குப் பிரபலமானவை. இந்த கலைக் குழு, நியூயார்க்கின் புரூக்லின் பகுதியில் உள்ளது.

மனித ரத்தம் கொண்ட காலணிகள், புனித நீரை கொண்ட ஷூக்கள், WD-40 யின் (இயந்திரங்களின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு வகை எண்ணெய்) வாசனையைக் கொண்ட வாசனை திரவியம், ராட்சத ரப்பர் பூட்ஸ் போன்ற பல விசித்திரமான தயாரிப்புக்களை இந்த கலைக் குழு ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த முறை, ட்ரெண்டிங்கில் இருக்கும் சிறிய கைப்பைகளைத் தயாரிப்பதற்கு முடிவெடுத்தது இந்த கலைக் குழு.

”பெரிய கைப்பை, சாதாரண கைப்பை மற்றும் சிறிய கைப்பை போன்றவை சந்தையில் இருக்கின்றன. ஆனால் இந்த நுண்ணிய கைப்பை மினியேட்சர் உருவத்தின் உச்சம்” என இந்த கைப்பை குறித்த பதிவு ஒன்றில் கூறியுள்ளது MSCHF.

இந்த பையில், ‘லூயிஸ் வுட்டான்’ (Louis Vuitton) என்ற மிகப்பெரும் ஆடம்பர ’கைப்பை பிராண்டின்’, பிரிண்டிங் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த நுண்ணிய கைப்பைக்கும், அந்த பிராண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த கைப்பை போட்டோபாலிமர் பிசினால் (Photopolymer resin) 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய தொழில்நுட்பத்தையும், கட்டமைப்புகளையும் செய்வதற்கு இந்த 3D பிரிண்டிங் முறை உதவியுள்ளது.

இந்த கைப்பைகள் உருவாக்கப்பட்ட பிறகு, மதிப்பாய்வு செய்வதற்காக பிராண்டிங் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இவை அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், பிராண்டிங் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டபோது சில கைப்பை மாதிரிகளை MSCHF குழு தொலைத்துவிட்டது என ஸ்மித்சோனியன் பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

இது போன்ற நிகழ்வுகள், இந்த கைப்பைகளை வாங்குவோருக்கு நடக்கக்கூடாது என்பதற்காக, இந்த கைப்பைகளோடு டிஜிட்டல் டிஸ்ப்ளே (Digital Display) கொண்ட மைக்ரோஸ்கோப்களும் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.

இந்த டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோஸ்கோப்பை, ஆன்லைன் சந்தைகளிலும் பெற முடியும். 60 டாலர்களிலிருந்து( இந்திய மதிப்பில் 4900ரூபாய்) இதன் விலை துவங்குகிறது.

அதேபோல் இந்த நுண்ணிய கைப்பைகள் ஏலம் விடப்பட்ட தளத்தில், மைக்ரோஸ்கோப்களின் விலை தனியாகப் பட்டியலிடப்படவில்லை. கைப்பைகளுக்கான ஏலம் 15,000 டாலரிலிருந்து துவங்கியது.

இந்த கைப்பையில் ‘லூயிஸ் வுட்டான்’ பிராண்டின், பிரிண்டிங்கை பயன்படுத்தியிருப்பது குறித்து, இந்த அமெரிக்க கலைக் குழுவின் கிரியேட்டிவ் அதிகாரி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் பேசியிருந்தார்.

அதில், “நாங்கள் இந்த பிரிண்டிங்கை பயன்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திடம் அனுமதி பெறவில்லை.

நாங்கள் பள்ளிகளில் படிக்கும்போது மன்னிப்பு கேட்க மட்டுமே பழகியிருந்தோம், ஆனால் அனுமதி பெறுவதற்குப் பழகவில்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.