மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களை பொலிஸ் தேடும்!!
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர் என்றும் இவர்களை பொலிஸாரும் உளவுத்துறையும் தேட வேண்டும் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் கிராமிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தி ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது “ அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புள்ளி வழங்கும் முறை குறித்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முறைமை ஒன்றைச் செய்யுங்கள். புள்ளி வழங்மும் வழங்கும் முறை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 20 சதவீதம் பேர் மட்டுமே முறைப்பாடு அளித்திருக்கின்றனர். நான் புரிந்து கொண்ட வரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் நிலை. மேலும், மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தையும் பிரதமர் நீடித்திருக்கிறார். கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு அமைப்பில் இருந்து இவற்றைச் செய்வது கடினம். எனவே, சில இடங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தலையீட்டில் இத்திட்டம் செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் அலைகிறார்கள்.
இந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்கு பொறுப்புக்களை வழங்கினர். மேல்முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரத்தை கிராமக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கிராமக் குழுக்களிடம் ஒப்படைப்போம். அந்த பிரேரணையை அமைச்சிடம் ஒப்படைப்போம். அதனை சுற்றறிக்கை மூலம் அறிவிக்க வேண்டும். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
அரசின் வேலைத்திட்டத்தை அதிகாரிகள் நாசப்படுத்த அனுமதிக்க முடியாது. மக்களைத் தூண்டிவிட்டு வீதியில் தள்ளுவது அதிகாரிகள்தான். இல்லாவிட்டால் அத்தியாவசிய சேவையை வழங்குவதா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும்.
இந்த வேலைத்திட்டத்துக்கு சமுர்த்தி அதிகாரிகள் முதல் முறையாக வரவில்லை. அப்போது நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம். சமுர்த்தி பெறுபவர்களில் 30-40 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள் என்றும் IMF கூறுகிறது.
அதையே நாங்களும் சொல்கிறோம். அதை சரி செய்ய வேண்டும். சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் பெயரில் கடன் பெற்றுள்ளனர். மக்களை குழப்பி போராட்டம் நடத்துபவர்கள் அவர்கள்தான். இது தோல்வி என்று காட்ட விரும்புகிறார்கள். அமைப்பு மாற்றம் அதுவல்ல. இந்தத் திட்டத்தை கிராமக் குழுக்களுக்கு ஒப்படைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அஸ்வசும நலன்புரித்திட்டம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒரு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்ப்புகள், முறையீடுகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். எதிர்ப்புகளின் எண்ணிக்கையை நூற்றுக்கு ஐந்து சதவீதத்திற்கு கொண்டு வர முடிந்தால், மக்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்று நினைக்கலாம்.
இது குறித்து பிரதேச செயலாளர்கள் கிராம மட்டத்தில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர். இவர்களை பொலிஸாரும் உளவுத்துறையும் தேட வேண்டும்.
தொழிற்சங்கங்கள் செய்யும் செயல்களுக்கு அரசைக் குறை கூறாதீர்கள். நாங்கள் எங்கள் மாவட்டத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களை முன்வைப்போம்” என்றார்.