பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு!!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 17 கட்சிகளை சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13, 14-ம் தேதிகளில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.