;
Athirady Tamil News

வாக்னர் கலகத்திற்கு பிறகு முதல் சந்திப்பு.. காணொலி மாநாட்டில் இந்திய, சீன தலைவர்களுடன் இணையும் புதின்!!

0

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார். 2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு நடந்தது.

ஆனால், இந்த முறை, இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது. இரு வாரங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்திற்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கி விட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானது.

இது குறித்து, வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குனர் மைக்கேல் கூகல்மேன் கூறும்போது, “இந்த கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்” என கூறியிருக்கிறார். அதே போல் இது இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷிய உறவு வலுவாக இருந்து வருகிறது. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது.

மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷியாவையே இந்தியா நம்பியுள்ளது. “ரேண்ட் கார்ப்பரேஷன்” (RAND Corporation) என்னும் அமெரிக்காவில் உள்ள லாபநோக்கமற்ற, அமைப்புசாரா பல்துறை சிந்தனை நிறுவனத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் கூறுகையில், “வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது” என கூறினார். சில நாட்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வலுவான புதிய உறவுக்கான திட்டங்களில் கையெழுத்திட்டார். இப்பின்னணியில் இந்தியா, ரஷிய-சீனாவுடனான தனது உறவை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.