கிளிநொச்சியில் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு வீதி நாடகம்!! (PHOTOS)
அரச கரும மொழிகள் நாள் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு “மொழி” என்கின்ற விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று(04) செவ்வாய்க்கிழமை சிறப்புற இடம்பெற்றது.
அரச கரும மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “மொழி” விழிப்புணர்வு வீதி நாடகம் கிளிநொச்சி மாவட்ட செயலக முன்றலில் இன்றைய தினம் பி.ப 3.00 மணிக்கு ஆற்றுகை செய்யப்பட்டது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிகள் பிரிவின் ஒழுங்குபடுத்தலில் குறித்த ஆற்றுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த “மொழி” விழிப்புணர்வு வீதி நாடகத்தினை கலாலைய கலைஞர்கள் மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மொழிகள் பிரிவின் வட மாகாண மத்திய நிலையம் என்பவற்றின் இணைந்த தயாரிப்பில் ஆற்றுகை செய்யப்பட்டது.
அரச கரும மொழிகள் வாரம் 01.07.2023ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி, நாளை(05) புதன்கிழமை வரையிலான ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக தேசிய மொழிகள் பிரிவின் இணைப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.