த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?!!
சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது.
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads) என்பதாகும். இன்ஸ்டாகிராம் செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியை, ஐஃபோன் பயனர்கள் முன்பதிவு அடிப்படையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பெறலாம்.
த்ரெட்ஸ் செயலியின் பிரதான முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. ‘எழுத்துகள் அடிப்படையில் உரையாடலுக்கான செயலி இது’ என்கிறது மெட்டா நிறுவனம்.
ட்விட்டர் உரிமையாளர் ஈலோன் மஸ்க் – மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இடையே நீடிக்கும் போட்டியின் அடுத்தக்கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ள தயார் என்று கூறியிருந்தார்கள். உண்மையிலேயே அதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களா என்பது தெரியவில்லை.
‘நல்லவேளை, அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்கள்’ என்று த்ரெட்ஸ் குறித்த தனது கருத்தை ட்வீட் செய்திருந்தார் எலோன் மஸ்க்.
அதேநேரத்தில், ட்விட்டரில் பரவலாக பயன்படுத்தப்படும் டேஷ்போர்டான ட்வீட்டெக் (TweetDeck) வசதி அடுத்த 30 நாட்களுக்குள் பணம் செலுத்தி பெறும் ஒன்றாக மாறிவிடும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் பயனர்களை சந்தாதாரர்களாக மாற்ற ஈலோன் மஸ்க் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்றுதான், ட்விட்டர் பயனர்கள் ஒரே நாளில் பார்க்கக் கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார்.
அதேநேரத்தில், மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலியோ இலவசமாகவும், ட்விட்டர் போன்று பதிவுகளை பார்வையிடுவதில் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் என்று தெரிகிறது.
“பல்வேறு சமூகத்தினரும் ஒரே இடத்தில் கூடி இன்றைய விஷயங்கள் குறித்தும் நாளைய ட்ரென்டிங் குறித்தும் விவாதிக்கும் இடமாக த்ரெட்ஸ் இருக்கும்” என்று ஐஃபோனில் உள்ள ஆப் ஸ்டோர் கூறுகிறது.
த்ரெட்ஸ் செயலியின் ஸ்க்ரீன்ஷாட்களை பார்க்கையில், அது கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே தென்படுகிறது.
இது மெட்டா நிறுவனத்தின் செயலி என்பதால், உங்கள் செல்போனின் தரவுகள், ப்ரவுசிங் ஹிஸ்டரி போன்றவற்றையும் த்ரெட்ஸ் பயன்படுத்திக் கொள்ளும்.
டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social), மஸ்டாடோன் (Mastodon) உள்பட அண்மைக் காலத்தில் ட்விட்டரைப் போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கும் பல செயலிகள் அறிமுகமாகியுள்ளன.
ட்விட்டர் பயனர்களுக்கு ஈலோன் மஸ்க் கட்டுப்பாடுகளை அறிவித்த பின்னர், ப்ளூஸ்கை(Blusky) செயலியில் பயனர்களின் செயல்பாடு சாதனை அளவை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், ட்விட்டருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக த்ரெட்ஸ் உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
மற்ற நிறுவனங்களின் யோசனைகளை வாங்கி அதனை மேம்படுத்தி வெற்றி பெறுவதில் மார்க் ஜூக்கர்பெர்க் கைதேர்ந்தர் என்பதை வரலாறு காட்டுகிறது.
மெட்டா நிறுவனத்தின் ரீல்ஸ் என்பது டிக்டாக் செயலியின் நகல் என்பது போல ஸ்நாப்சாட்டின் அப்பட்டமான நகலே ஸ்டோரிஸ் என்றும் பரவலாக கருதப்படுகிறது.
ட்விட்டருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு மெட்டா நிறுவனத்திற்கு ஆதார வளம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஒரு பகுதியாகவே த்ரெட்ஸ் இருக்கும். ஆகவே, இது பல கோடி பயனர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கும். ஆகவே, இது பூஜ்யத்தில் இருந்து தொடங்கப்படப் போவதில்லை. ட்விட்டருக்குப் போட்டியாக அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற செயலிகள் அந்த நிலையில்தான் இருந்தன.
பேச்சுரிமைக்கு குரல் கொடுத்தமைக்காக ஈலோன் மஸ்க் அண்மையில் புகழப்பட்டாலும், ட்விட்டரில் அவரது செயல்பாடுகள் அதற்கு மாறாகவே உள்ளன.
ட்விட்டரின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த பயனர்களை இழுப்பதன் மூலம் ட்விட்டருக்கு சரியான மாற்றாக த்ரெட்ஸை உருவெடுக்கச் செய்ய முடியும் என்று ஜூக்கர்பெர்க் நம்புவதாக தெரிகிறது.