எலான் மஸ்க்கின் புதிய கட்டுப்பாடுக்கு டுவிட்டர் சிஇஓ ஆதரவு!!
டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும்.
வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்தார். பின்னர், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டுக்கு ஆதரவுடன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ” டுவிட்டர் போன்ற ஒரு பணியைக் கொண்டிருக்கும் போது தளத்தை வலுப்படுத்த பெரிய நகர்வுகளை செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் “தீவிர நிலைகளை” ஊக்கப்படுத்துகிறது. எங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, எங்கள் தளத்திலிருந்து ஸ்பேம் மற்றும் போட்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இருப்பினும், மஸ்க் அறிவித்த சில நாட்களில், டுவிட்டர் பயனர்கள் வரம்பை எட்டிய பிறகு, கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை என்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர். விளம்பரதாரர்களை ஈர்க்கும் யாக்கரினோவின் முயற்சிகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.