கர்நாடகாவில் விவசாய பண்ணையில் ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு- விவசாயி கண்ணீர்!!!
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது விழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் இருந்த ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தக்காளியை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த விவசாயி பர்வதம்மா கடும் வேதனை அடைந்தார்.
இதுபற்றி பர்வதம்மா கூறுகையில், ‘எங்கள் குடும்பத்தினர் தக்காளி பண்ணையை எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்தனர். இரண்டு ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தோம். இதற்கு முன்பு எதுவும் கிடைக்கவில்லை. சில சமயம் தக்காளி வளரும், ஆனால் அவை பழுக்காது. இந்த முறை நல்ல மகசூல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் யாரோ திருடிச் சென்றுவிட்டனர்’ என கண்ணீர்மல்க தெரிவித்தார். நாங்கள் பண்ணையில் மிகவும் கடுமையாக உழைத்தோம்.
என் கணவரால் பேச முடியாது. எங்களின் உழைப்பையும் பணத்தையும் கொட்டினோம், ஆனால் அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் அவர் வேதனையுடன் கூறினார். இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து நேற்று இரவு 20 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ளது.