இணையவழி விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி? மீண்டும் பரிந்துரை!!
மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான ‘டைனடக்சி மேப்’ மருந்து மீது தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கான அந்த மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆராயவுள்ளது.
இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. குழுவில் இடம்பெற்றிருந்த கோவா, 28 சதவீதத்துக்குப் பதிலாக 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வலியுறுத்தியதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பெரும்பான்மை அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டது. இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது. எனினும், அதில் இடம் பெற்றிருந்த சில விவகாரங்களுக்கு கோவா எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. அதன் அடிப்படையில் மாநில நிதியமைச்சா்கள் குழு மீண்டும் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.