;
Athirady Tamil News

கல்வியால் மன அழுத்தம்.. சீனாவில் இளைஞர்களின் தற்கொலை அதிகரிப்பு!!

0

உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருக்கும் கடுமையான கல்வி முறையால் 35 வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.

சீன மாணவ-மாணவியர் எதிர்கொள்ளும் கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் நடத்திய ஒரு ஆய்வில், 2010 முதல் 2021 வரை 5-வயது முதல் 14-வயது வரையிலான குழந்தைகளின் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10% அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதே போல், 15-வயது முதல் 24-வயது வரையிலான தனிநபர்களிடையே தற்கொலை விகிதம் 2017 வரை 7% சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% உயர்வை எட்டியுள்ளது.

சீனாவில் வாழ்வில் ஒரு உயர்வான அந்தஸ்து பெற, கல்வியில் பெரும் வெற்றியடைய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில் நாட்டம் பெறுவதால் அவர்கள் மன நலனை பெரிதும் இது பாதித்துள்ளது. இதை களைய உடனடி கவனம் மற்றும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

மேலும் ஆரம்பகால அறிகுறிகள் மூலம் தற்கொலை நடத்தையை உடனடியாகக் கண்டறியவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். சீனாவில் இளைஞர்கள் நீண்ட காலமாக கடுமையான போட்டிகளை எதிர்நோக்குகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் பட்டப்படிப்பு முடிந்ததும் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பெரிதாக மாறி அவர்களுக்கு பெருமளவு அழுத்தத்தை உண்டாக்குகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காலம் 3 ஆண்டுகளாக நீடித்ததால், நாடு முழுவதும் ஏற்பட்ட முடக்கம் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

வழக்கமாகவே சீனாவில் கல்லூரி வளாகங்கள், மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை கூட்டும் விதமாக, பல கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை தருகின்றன எனும் கருத்துகள் வலம் வந்தன. இவையெல்லாவற்றையும் விட வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, இதர சவால்களையும் சேர்த்து, நம்பிக்கையின்மையை அதிகரிக்கச் செய்கிறது. நாட்டின் வருங்கால தூண்கள் என கருதப்படும் இளம் வயதினர் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு இறப்பதை தடுக்க, சீனா விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.