கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில் மேகதாது அணை திட்டம் கடந்து வந்த பாதை!!
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இந்த அணை கட்டும் திட்டம் கடந்து வந்த பாதை…. பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நீர் மின் உற்பத்திக்காகவும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை தேக்கி வைப்பதற்காக மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசன துறை மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமார் மேகதாது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தார். அவர், அணை அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் தீராத பிரச்சினை இருந்து வரும் நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முனைப்பில் மும்முரமாக இருந்து வருகிறது. மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பின்னர் பா.ஜனதா அரசும் மேகதாதுவில் அணைகட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த மார்ச் மாதம் முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியை ஒதுக்கினார். பின்னர் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்-மந்திரி சித்தராமையா மேகதாதுவில் அணைகட்ட தேவையான நிலங்களை விரைவில் கையகப்படுத்த அறிவித்துள்ளார். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.