பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை!!
பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் கோவில், அதை சுற்றி இருக்கும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலமாக ஒரு நபரை வி.வி.புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. அந்த நபர் பெயர் ரவி ஆகும். இவர், எய்ட்ஸ் (எச்.ஐ.வி) நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஆவார். அதாவது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை கர்நாடகம் உள்பட 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
6 ஆண்டுகளில் 33 மாநிலங்களுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால், ரவியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மோட்டார் சைக்கிளை பரிசாகவும் வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். அந்த வறுமை தான் அவரை திருடனாகவும் மாற்றி இருக்கிறது. இதனால் அவர், வி.வி.புரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. அந்த சாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர். கைதான ரவி மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.