நோயாளிகளை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை!!
சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளியொருவர் பாதிக்கப்பட்டால், சாக்குப்போக்கு கூறாமல் நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை அல்லது பொய்மை குறித்து ஆராய்ந்து குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவதானித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச சுகாதாரம் மற்றும் நிவாரணம் கிடைக்கும் வகையில் இலவச சுகாதார சேவையை எந்தவித குறைப்புமின்றி பேணுவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான அபிலாஷை எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.