ரூ.2000 நோட்டு மோசடி கும்பலிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் சொர்ணலதா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை ஊழியர்கள் 2 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சூரி பாபு என்பவரை சந்தித்தனர். அப்போது அவர்கள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.1 கோடி 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் ஒரே நேரத்தில் ரூ.10 லட்சம் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து சூரிபாபு நேற்று முன்தினம் இரவு ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிம்ம தாரா என்.ஆர்.ஐ ஆஸ்பத்திரி அருகே வந்தார்.
சிறிது நேரத்தில் ஓய்வுபெற்ற கடற்படை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா தன்னுடைய வாகனத்தில் ஆஸ்பத்திரி அருகே வந்தார். போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு மற்றும் ஹோங்கா ஆகியோர் உடன் வந்தனர். பணத்துடன் சூரி பாபு உள்ளிட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர். ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதையடுத்து சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ண லதாவிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ணலதா ரூ.12 லட்சம் பணம் வாங்கியது குறித்து டி.எஸ்.பி. வித்யாசாகரிடம் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து சொர்ணலதா, போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு, ஹோங்கா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.