சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம்!!!
காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது. கடைநிலை காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையில் இதற்கு விதிவிலக்கு அல்ல. காலையில் 10 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் மற்ற பணிகளைப் போல் அல்லாமல், கூப்பிடும் நேரங்களில் எல்லாம் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் காவலர்களுக்கு மட்டுமே இருந்து வருகிறது. இதனால் காவல்துறையில் பணியில் இருப்போர் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படி ஓய்வில்லாமல் பணிபுரிவதன் காரணமாகவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட முடியாததால்தான் மனைவி மற்றும் குடும்பத்தினரின் கோபம், பணியின் போது உயர் அதிகாரிகளின் கோபம் என காவலர்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் தினம் தினம் சங்கடங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது நாளடைவில் பெரிய மனச்சோர்வை ஏற்படுத்தி மன அழுத்தமாக மாறிவிடுகிறது என்றால் அது மிகையாகாது. இப்படி தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களில் பலர் பணி சுமையுடனேயே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் இனி வாழ்ந்தது போதும் என்கிற முடிவுக்கு வந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான அதிகாரிகளே இது போன்ற தற்கொலை எண்ணத்திற்கு தொடர்ந்து தள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமாரின் தற்கொலை தமிழக காவல் துறையையே உலுக்கி எடுத்துள்ளது. கடுமையான போராட்டங்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய அந்தஸ்தை எட்டிப் பிடித்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியே மன அழுத்தத்துக்கு ஆளாகி தனது உயிரையே துறந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கே இவ்வளவு மன அழுத்தம் என்றால் சாதாரண காவலர்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் பலரும் எழுப்புகிறார்கள். இதுபோன்ற மன அழுத்தத்தை போக்க தமிழகம் முழுவதுமே அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் காவல்துறை மரணங்கள் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் காவல் ஆணையாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியில் உள்ள காவலர்களுக்கு மனச்சோர்வை போக்கும் வகையில் அவ்வப்போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறையில் காவல் துறையினரின் மனச்சோர்வை போக்குவதற்காக மகிழ்ச்சி-ஆனந்தம் என்கிற இரண்டு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் இந்த இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு பயிற்சிகளுக்கு வித்திட்டார். இதன் ஒருங்கிணைப்பாளராக கூடுதல் கமிஷனர் லோகநாதன் உள்ளார். மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் இதுவரையில் 2500-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முழு அளவிலான மன பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை குருநானக் கல்லூரியில் இதற்கென தனி பயிற்சி மையமே செயல்பட்டு வருகிறது. இங்கு மன அழுத்தத்தோடு செல்லும் காவலர்களுக்கு மட்டுமின்றி, போதைக்கு அடிமையாகி இருக்கும் காவலர்களுக்கும் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 600 காவலர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். காவலர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக தனித்தனி பணியாளர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். காவலர்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் அளிப்பதற்கும் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். இந்த மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
இதேபோன்று பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆனந்தம். இந்த ஆனந்தம் திட்டத்தின் கீழ் பெண் காவலர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் பெண் காவலர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆண் காவலர்களைவிட பெண் காவலர்களுக்கு மன ரீதியான பயிற்சி அதிகமாக தேவைப்படுகிறது. சென்னையில் 5500 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 3000-க்கும் மேற்பட்டோருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பெண் காவலர்களை பொறுத்தவரையில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவர்கள் காவல்துறை பணியையும் பார்த்துக் கொண்டு தங்களது குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ‘ஆனந்தம்’ என்கிற திட்டமும் சென்னை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கமிஷனர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மேரிராஜூ ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். சென்னை காவல் துறையில் போலீசாரின் பிறந்த நாள் அன்று காவலர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை முன்னாள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழக்கமாக வைத்திருந்தார். தற்போதைய கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரும் அதனை கடைபிடித்து வருகிறார்.
இதுபோன்ற மன அழுத்த பயிற்சி மற்றும் வாழ்த்துக்கள் ஆகியவை காரணமாக சென்னை மாநகர போலீசார் ஓரளவுக்கு மன அழுத்தமின்றி பணிபுரிந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றும் போலீசாரை நேரில் அழைத்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள். அவர்கள் தொடர்பான வீடியோக்களும் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது காவலர்கள் மேலும் உத்வேகத்தோடு பணியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் உயர் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. இப்படி பல்வேறு மன அழுத்த பயிற்சிகள் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட போதிலும் போதிய அளவிலான விடுமுறை அவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் முழுமையாக வெளிவர முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இதற்கு தேவையான அளவு காவலர்களை காவல் துறையில் அமர்த்தி விடுமுறை தேவைப்படும் காவலர்களுக்கு உரிய முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் காவல் துறையில் மன அழுத்தம் மறைந்து புத்துணர்ச்சி பிறக்கும் என்பதே அனைத்து காவலர்களின் கருத்தாக உள்ளது.