;
Athirady Tamil News

அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழக பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள்… அதிர்ச்சி தகவல்!!

0

அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஜெண்ட் மூலமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வீட்டு வேலை செய்து வந்த அவரின் விசா காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறித்து விட்டு அங்குள்ள ஒரு அறையில் அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அங்குள்ள சிலர் முயற்சித்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மூலமாக, துபாயில் தங்கி தொழில் செய்து அறக்கட்டளை நடத்தி வரும் அன்வர் அலி என்பவர் உதவியை நாடினார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி விமான டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கூறும்போது, அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனக்கும் அவர்கள் குறி வைத்தார்கள். நான் ஒரு வழியாக அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார். இதுபற்றி அன்வர் அலி கூறும்போது, அரபு நாடுகளில் உள்ள வீடுகளில் சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலை, வீட்டு வேலைகள் காலியாக உள்ளன.

இதற்கு கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ள நர்சுகள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை இந்த புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள். இவ்வாறு வேலை தேடி வரும் பெண்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை தெரிந்துகொண்டு பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து செலவுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் பின்னர் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அவர்களை அழைத்து வந்து தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பின்னர் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள். திருச்சி பெண் மீனா எனது உதவியை நாடியதால் தப்பித்துக் கொண்டார். இல்லையென்றால் அவரையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருப்பார்கள். எனவே வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வேலையை ஆராய்ந்து வர வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் இங்கு இன்னல்களை அனுபவித்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். திருச்சி மாவட்டம் நிர்வாகமும் அப்பாவி பெண்களை ஏமாற்றி அனுப்பும் போலி ஏஜெண்டுகளை இனம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.