உள்ளூர் தயாரிப்பு டி.வி.கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை- வாலிபர்கள் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப், ஷெஹனாஸ். இவர்கள் திருப்பதி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அப்போது உள்ளூர் தயாரிப்பு டிவிகள் மீது பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முகமது ஆசிப், ஷெஹனாஸ் ஆகியோர் ஒரு காரில் போலி டி.வி.களை ஏற்றிக் கொண்டு அலிப்பிரி வழியாக திருப்பதி மலையில் உள்ள ஜி.என்.சி சோதனை சாவடிக்கு வந்தனர். தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முகமது ஆசிப் ஒட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் டி.வி.க்களை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த விஜிலென்ஸ் போலீசார் இருவரையும் பிடித்து திருமலை போலீசில் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வதை தடுக்க அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு, அபாய ஆஞ்சநேயர் சாமி கோவில் ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் மலை மீது எப்படி டி.வி.க்களை கொண்டு வந்தனர் என தெரியவில்லை. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உள்ளூர் தயாரிப்பு டிவிக்கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.