தெலுங்கானா மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளை!!
தெலுங்கானா மாநிலம் வைரா மற்றும் தள்ளாடார் மண்டலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கும்பல் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து சென்று உள்ளனர். வைரா மண்டலத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பணத்தை டெபாசிட் செய்ய எந்திரத்தை திறந்து கணக்கு சரிபார்த்தார். அப்போது டெபாசிட் செய்த பணத்திற்கும் வாடிக்கையாளர்கள் எடுத்த பணத்திற்கும் இடையே அதிக அளவில் வித்தியாசம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகி நூதன முறையில் பணம் வரும் நேரத்தில் கார்டை வெளியே எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக கணக்கில் வரவில்லை. இந்த மாதம் 1-ந் தேதி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் 17 ஏ டி எம் கார்டுகளை பயன்படுத்தி 30 தடவை ரூ 6.96 லட்சம் பணம் எடுத்து உள்ளனர். இந்த மோசடியில் 6 வாலிபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் வைரா மற்றும் தல்லாட போலீசில் புகார் செய்தனர். போலீசார் கேமரா காட்சிகள் மூலம் கும்பலை தேடி வருகின்றனர்.