;
Athirady Tamil News

லாக்மே: ஏர் இந்தியாவை அரசுடைமை ஆக்கிய நேரு அழகு சாதன பொருள் தயாரிக்க டாடாவை தூண்டியது ஏன்?!!

0

கடந்த சில நாட்களாக வன்முறையில் சிக்குண்டு கிடக்கும் பாரிஸ் நகர வீதிகள், பல்வேறு தேசிய, சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வுதான், இந்தியாவில் பிறந்த அழகு சாதன பொருட்களுக்கான பிராண்டான ‘லாக்மே’ பிறப்பும்.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ஒரு அங்கமாக லாக்மே நிறுவனம் தற்போது திகழ்கிறது. அத்துடன் லாக்மே என்பது சர்வதேச பிராண்டாகவும் மாறிவிட்டது. ஆனால், அந்த நிறுவனம் முன்னாள் பிரதமர் ஒருவர் வலியுறுத்தலின் பேரில் இந்திய வணிகர் ஒருவரால் தொடங்கப்பட்டது. இதற்காக பிரதமரை அவரது சொந்த மகளே வலியுறுத்தியதாக கூறப்படுவதும் உண்டு.

அந்த நேரத்தில், தொழில்துறையினருக்கும், பிரதமருக்கும் இடையே சில சிந்தாந்த ரீதியிலான வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும், தொழில்துறையினர் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினர். இந்த பிராண்ட் அதன் பெயரை, இந்து பெண் தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பாரிஸ் நகர தெருவோர இசை நாடகத்தில் இருந்து எடுத்துக் கொண்டது. அந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. அந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா.
நேரு, இந்திரா மற்றும் டாடா

சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் பிரதமரான நேரு, சோசலிச பொருளாதாரத்தை பின்பற்றினார். அதன்படி, காப்பீடு, வங்கி, சுரங்கம், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் இருந்த நிறுவனங்களை அவர் நாட்டுடைமையாக்கினார்.

1949-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமத்திடம் இருந்து 49 சதவீத பங்குகளை அரசு கையகப்படுத்தியது. ஜே.ஆர்.டி. டாடா விமானப் போக்குவரத்து துறையை மிகவும் நேசித்தார். அவரே ஒரு உரிமம் பெற்ற விமானி ஆவார். அதனால், அரசின் தலையீட்டிற்கு எதிரான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

டாடா ஏர் இந்தியாவை ஒரு சர்வதேச பிராண்டாக மாற்ற ஜே.ஆர்.டி. டாடா விரும்பினார். ஆனால், அன்றைய அரசு நிர்வாகத்தின் கீழ் அது முடியாத ஒன்றாகிவிட்டது. ஏர் இந்தியா பங்குதாரர்களும், மற்ற பயனாளிகளும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று அவர் கருதினார். முடிவில், 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா நாட்டுமையாக்கப்பட்டது. இது ஜே.ஆர்.டி. டாடாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த நேரத்தில், இந்தியா அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்திருந்த கடனின் அளவு உச்சம் தொட்டது. இதனால், டாலரின் மதிப்பும் அதிகரித்தது. அதனால், அந்நிய செலாவணியை கட்டுக்குள் வைத்திருக்க, அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில், பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தியோர் பெண்களாகவே இருந்தனர்.

பிரதமரின் இல்லத்திற்கே சென்று பெண்கள் அமைப்பினர் பலரும் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். நேருவின் மகளான இந்திராகாந்தி அதனை செவிமடுத்தார். அவரே தனது தந்தையிடம் சென்று இதுவிஷயத்தில் ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தினார்.

ஒருமுறை, பிரதமர் நேரு அவரது அலுவலகத்திற்குச் செல்லும் போது வழிமறித்த பெண்கள் சிலர், இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் உங்களுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பினர்.

நேருவின் தனிச் செயலாளர் எம்.ஓ.மாத்தாயிடம் இந்த பிரச்னையை கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாத்தாய் அந்த பெண்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்திரா அதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, ‘அது விஷயத்தில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?’ என்றார் மாத்தாய். அதற்கு இந்திரா, அதுபோன்ற பொருட்களை இந்திய நிறுவனங்கள் எதுவும் தயாரிக்கவில்லை என்று பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, டாடா நிறுவனத்தின் டெல்லி பிரதிநிதியை அணுகிய மாத்தாய், அழகுசாதன நிறுவனம் ஒன்றை தொடங்க டாடா குழுமம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஒரு புறம் ஏர் இந்தியாவை கையகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த நேரு அரசு, மறு புறம் புதிய தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக இருப்பது கண்டு ஜெ,ஆர்.டி. டாடா ஆச்சர்யமடைந்தார்.

பின்னாளில், நேரு அரசு ஏர் இந்தியாவை அரசுடைமையாக்கி, ஜே.ஆர்.டி. டாடாவை அதன் தலைவராக்கியது. அடுத்து வந்த காலத்தில் இந்திராகாந்தி பிரதமரான போது ஏர் இந்தியாவின் தலைவராக ஜே.ஆர்.டி.வை மீண்டும் நியமித்தார். இந்திரா மகன் ராஜிவ் காந்தியோ, ஜே.ஆர்.டி. டாடாவை அந்த பதவியில் இருந்து நீக்கினாலும் அவரது மகன் ரத்தன் டாடாவையே அந்த இடத்தில் நியமித்ததால் ஜே.ஆர்.டி. டாடாவுக்கு அதிருப்தி அளிக்கவில்லை.

இந்தியர்களின் தோல் மற்றும் காலநிலைக்கு பொருந்திப் போவது போன்ற அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பதற்கான முன்னெடுப்புகளை டாடா தொடங்கினார். அந்த சமயத்தில், மும்பையில் ஹோட்டல்கள், பீகாரில் ஸ்டீல் ஆலை, குஜராத்தில் ரசாயன ஆலைகள் போன்றவை டாடாவுக்கு இருந்தன. அந்த வரிசையில் கொச்சியில் இருந்த ஆலைக்கு டாடா ஆயில் மில் நிறுவனம் என்பது பெயர்.

1920-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் இயங்கி வந்தது. தேங்காயில் இருந்து எண்ணெயை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. பின்னர் சோப்பு, டிடர்ஜெண்ட்கள், ஷாம்பூ, சமையல் எண்ணெய் போன்றவற்றையும் அந்நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. ஹமாம், 501, ஓகே மற்றும் மேஜிக் போன்றவை அந்நிறுவனத்தின் புகழ் பெற்ற பிராண்ட்கள் ஆகும். தமிழ்நாடு, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் அதற்கு ஆலைகள் இருந்தன.

அந்த டாடா ஆயில் மில்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகவே லாக்மே 1952-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. பிரான்சைச் சேர்ந்த ராபர்ட் பிக்கோட், ரேனார் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்மார் போன்ற நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் எடுப்பதற்கான வழிமுறைகளை லாக்மே பெற்றது. அதற்காக, டாடா நிறுவனத்தின் பங்குகள் ஏதும் அவற்றிற்குத் தரப்படவில்லை. மாறாக, உரிய பணம் தரப்பட்டது.

1961-ம் ஆண்டில், ரத்தன் டாடாவின் வளர்ப்புத் தாயான சிமோன் டாடா, லாக்மே நிறுவனத்தின் மேலாளரானார். பிரான்சில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் கல்வி கற்ற சிமோன் டாடாவுக்கு லாக்மே தயாரிப்புகள் குறித்து ஆழமான புரிதல் இருந்தது. பின்னர் டாடா இண்டஸ்ட்ரீசில் இணைந்த அவர், 1982-ம் ஆண்டு அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தார்.

மும்பையில் பீடர் சாலையில் வாடகைக் கட்டடத்தில் லாக்மே தனது உற்பத்தியைத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில் உற்பத்தியை பெருக்கிய அந்நிறுவனம் பலதரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கியது.

பின்னர், மும்பை அருகேயுள்ள ஷிவ்டி என்ற இடத்திற்கு ஆலை மாற்றப்பட்டது. பீடர் சாலையில் இருந்த வாடகைக் கட்டடத்தைக் காட்டிலும் இது 3 மடங்கு பெரியது. அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் இடம் வாங்கப்பட்டது. 2 ஷிப்ட்களில் வேலைகள் நடைபெற்றன.

கண்ணைக் கவரும் பேக்கேஜ், உயர் தரம், விளம்பரம், சந்தை ஆய்வு போன்றவை லாக்மே தயாரிப்புகளுக்கு நுகர்வோர் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. மற்ற வேலைகளை விற்பனை மற்றும் விநியோகஸ்தர் பிரிவு பார்த்துக் கொண்டது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங்களையும் அவர்கள் குறிவைத்தார்.

ஒரு பிராண்ட் வெற்றி பெறும் போது, அதே பெயரில் துணை பிராண்ட்களும் உருவாக்கப்படுவது தொழில்துறையில் வழக்கம் தானே. உதாரணமாக, குளியல் சோப்பின் பெயரிலேயே வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகிறது அல்லவா. அந்த பாதையில் லாக்மேயும் சென்றதில் வியப்பில்லை.

1980-ம் ஆண்டு லாக்மே நிறுவனம் அழகு நிலையங்களையும் தொடங்கியது. அதைத் தவிர்த்து, லாக்மேயின் அழகுக்கலை கல்வி நிலையங்களும் உள்ளன. அங்கே, அழகுக் கலைஞர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழும் தரப்பட்டது.
டாடா நிறுவன பிரதிநிதிகள் பிரான்சில் இருந்த போது, அவர்களிடம் புதிய பிராண்டிற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசனை கேட்கப்பட்டது. அந்த நேரத்தில், பிரான்சில் ‘லாக்மே’ என்ற இசை நாடகம் பிரபலம். அது இந்துக்கடவுளான லட்சுமியின் பிரெஞ்சு பதம் ஆகும். அதில் இந்தியத்தன்மை இருந்தாலும் பிரான்ஸ் கலாசாரத்தின் செல்வாக்கும் இருந்தது.

இந்த பிரெஞ்சு இசை நாடகம் 19-ம் நூற்றாண்டில் வடிவம் பெற்றது. நீலகாந்த் என்ற சாமியார், அவரது மகள் லட்சுமி, பணிப்பெண் மல்லிகா மற்றும் ஃபிரடெரிக், ஜெரால்டு ஆகிய 2 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளைச் சுற்றியே கதை நகர்கிறது.

ஒருமுறை லட்சுமியும் மல்லிகாவும் பூ பறிக்க ஆற்றுக்குச் செல்கிறார்கள். லட்சுமி ஆபரணங்களை அகற்றும் முன்பாக குளிப்பதற்கு தண்ணீரில் இறங்கினார். அப்போது, இரண்டு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அங்கு வந்தனர்.

ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி நகைகளைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் கொள்கிறார். அதே நேரத்தில், ஜெரால்ட் அவளை ஓவியமாக வரையத் தொடங்குகிறார்.

திடீரென ஜெரால்டை பார்த்த லட்சுமி அலறினார். ஜெரால்ட் எப்படியோ அவளை சமாதானப்படுத்துகிறார். அதனால் மீட்க முன்வருபவர்களை லட்சுமி திருப்பி அனுப்புகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

இதற்கிடையில், ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தனது மகளைப் பார்க்க வந்ததை அறிந்த நீலகாந்த், பழிவாங்க முடிவு செய்தார்.

பஜாரில் லக்ஷ்மியை பாடும்படி நீலகாந்த் கேட்டுக் கொள்கிறார். அதைக் கேட்டவுடன் ஜெரால்டு அங்கு வர, லட்சுமி மயக்கமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த நீலகாந்த், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் தாக்கி காயப்படுத்துகிறார்.

லட்சுமி அதிகாரியை காட்டில் உள்ள ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார். ஜெரால்டு குணமடைகிறார். அடுத்த பிறவியில் தங்களது பிணைப்பு வலுப்பெற வேண்டும் என்பதற்காக லட்சுமி புனித நீர் எடுத்து வரச் செல்கிறார்.

அந்த நேரத்தில், ஆங்கில இராணுவ அதிகாரி ஃபிரடெரிக் திரும்பி வந்து தனது கடமையை தனது நண்பர் ஜெரால்டுக்கு நினைவுபடுத்துகிறார். ஜெரால்டின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த லக்ஷ்மி, தங்களுக்கு இடையில் இருந்த காதல் மறைந்து போவதை உணர்கிறார்.

அவமானத்தில் வாழ்வதை விட மரணம் மேலானது என்று எண்ணிய லக்ஷ்மி ஒரு பூவைத் தின்று உயிர்த் தியாகம் செய்கிறாள். அத்துடன், லட்சுமி மற்றும் ஜெரால்டின் காதல் கதை முடிகிறது.

இந்த இசை நாடகத்தைத் தவிர செழிப்பு மற்றும் அழகின் தெய்வம் லக்ஷ்மி என்பதால், அதன் பிரஞ்சு வடிவமான ‘லக்மே’ என்பதே பிராண்ட் பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர், டாம்கோவின் அதிகாரத்தை தர்பாரி ஷெத் என்ற சக்திவாய்ந்த டாடா குழும நிர்வாகி கைப்பற்றினார். அவர் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால், ஒரு வகையில் குழுவை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்தது.

அணுசக்தி ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஞ்ஞானி ஹோமி பாபா 1980 களின் முற்பகுதியில் ஓய்வு பெற்றபோது, டோம்கோவின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு தர்பாரி ஷெத் கேட்டுக் கொள்ளப்பட்டார், அதை அவர் மகிழ்ச்சியுடன் செய்தார்.

1991 ஆம் ஆண்டு ஜேஆர்டியிடம் இருந்து டாடா குழும அதிகாரத்தை ரத்தன் டாடா முழுமையாக பெற்றார். டாடா குழுமத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர அவர் விரும்பினார். எனவே இயக்குநர் குழுவில் ஓய்வு பெறும் வயது வரம்பை அமல்படுத்தினார். தர்பாரி சேத், அஜித் கெர்கர் (டாடாவின் ஹோட்டல் தொழில்), ருசி மோடி (டாடாவின் எஃகு தொழில்) மற்றும் நானி பால்கிவாலா (சிமெண்ட்) போன்ற மூத்தவர்கள் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

ஜே.ஆர்.டி. காலத்தில் டாடா நிறுவனங்களுக்கு தனி அடையாளங்கள் இருந்தன. அவை சுதந்திரமாக செயல்படவும் ஜே.ஆர்.டி. அனுமதித்தார். ஆனால், ரத்தன் டாடாவோ, அனைத்தும் டாடா பிராண்டுடன் இணைந்து ‘ஒருங்கிணைந்த அடையாளத்தை’ கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். தவிர, டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள விரும்பியது.

நிறுவனத்தின் மது வணிகம் விற்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், மார்ச்-1992ல், டாம்கோ நிறுவனத்துக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கணினிமயமாக்கல், விநியோக முறையின் நவீனமயமாக்கல் போன்ற காரணங்களால் டாம்கோ காலத்துக்கு ஏற்றவாறு 10 ஆண்டுகள் பின்தங்கிவிட்டதாக ரத்தன் டாடா கருதினார்.

டெட்லி, ஜாகுவார், லேண்ட் ரோவர், டேவூ மற்றும் கோரஸ் போன்ற முக்கியமான நிறுவனங்களை ரத்தன் டாடா வாங்கினார்.

1993-ல், டாம்கோ அதன் போட்டி நிறுவனமான இந்துஸ்தான் லீவருடன் (இப்போது இந்துஸ்தான் யூனிலீவர்) இணைந்தது. டாம்கோவின் பங்குதாரர்கள் தங்கள் பங்குகளுக்கு ஈடாக இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளில் ஒரு சதவீதத்தைப் பெற்றனர்.

1996-ல், லக்மே மற்றும் இந்துஸ்தான் லீவர் இடையே 50:50 கூட்டாண்மையில் ஒரு கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டது. பின்னர் 1998-ல் இது இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. Procter & Gamble மற்றும் மற்றொரு பார்சி தொழில் அதிபரான கோத்ரேஜ் ஆகியோரும் இதனையே செய்திருந்தனர் என்பதால் லாக்மேவின் செயலால் ஆச்சர்யம் ஏதும் எழவில்லை.

விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் சில்லறை விற்பனை அலகான Trant-ல் முதலீடு செய்யப்பட்டது. அதே நிறுவனம் இன்று ஸ்டார் பஜார், வெஸ்ட்சைட் மற்றும் ஜோடியோ போன்ற சங்கிலித் தொடர் கடைகளை இயக்குகிறது.

இன்று இந்துஸ்தான் யூனிலீவரின் ஆயிரம் கோடி பிராண்டுகளில் ஒன்றாக லாக்மே திகழ்கிறது. லிப்ஸ்டிக், மஸ்காரா, ஐ ஷேடோ, மேக்கப், நெயில் கலர், ஃபேஸ் மாஸ்க், சன் ஸ்கிரீன் லோஷன் உள்ளிட்ட பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஃபேஷன் வீக் நிகழ்வுக்கு லாக்மே ஸ்பான்சர் செய்கிறது.

2022 ஆண்டு கணக்கீட்டின்படி, இந்திய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் 10 சதவீத பங்கை லாக்மே குழுமம் கொண்டுள்ளது. மேபெல்லைன் (Maybelline) 7 சதவீத பங்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மைக்லாம் (MyGlam), சுகர் (Sugar) ஆகிய நிறுவனங்கள் தலா 4 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன.

சுகர் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வினிதா சிங், “இந்தியப் பெண்களுக்கு அவர்களின் தோலின் நிறம் மற்றும் சூழலுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப்பை வழங்குவதே தனது நோக்கமாக இருந்தது.” என்று கூறுகிறார்.

தங்களது நிறுவனம் விரைவில் அழகுசாதன வணிகத்தில் நுழையப் போவதாக வெஸ்ட்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த நோயல் டாடா கூறியுள்ளார். உள்ளாடைகள் முதல் காலணிகள் வரை அவர்களின் கவனம் இருக்கும். சிமோனைப் போல நோயல் டாடா வெற்றி பெறுவாரா இல்லையா என்பதைப் பார்ப்பது முக்கியம் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.