அமெரிக்காவின் முடிவை மறுக்கும் பிரித்தானியா !!
உக்ரைனுக்கு கொத்தணிக் குண்டுகளை வழங்கும் அமெரிக்கவின் முடிவை பிரித்தானியா அங்கீகரிக்க மறுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்ள்ஸ் ஆகியோரையும் பைடன் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளார்.
பைடனின் பிரித்தானிய பயணம்
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் இடம்பெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் தனது பிரித்தானிய பயணத்தை மேற்கொள்ளும் பைடன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்ள்ஸ் ஆகியோருடனும் உக்ரைனின் போர் மற்றும் இராணுவக் கூட்டணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் உக்ரைனுக்கு கொத்தணிக் குண்டுகளை வழங்கும் அமெரிக்கவின் முடிவு பிரித்தானியாவை சங்கடப்படுத்தியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பிரித்தானியா உட்பட 123 நாடுகளில் கொத்தணி வெடிகுண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவிலும் சர்ச்சை
உக்ரைனுக்கு இந்த ரக குண்டுகளை வழங்குவதான வெள்ளை மாளிகையின் அறிவிப்பு பிரித்தானியாவிலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது அமெரிக்காவுக்கு ஒரு கடினமான முடிவாக இருந்தாலும், உக்ரைனியர்களிடம் வெடி மருந்துகள் தீர்ந்துவிட்டதால் இதனை செய்யவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசி சுனக், அமெரிக்காவின் இந்த முடிவை ஆதரிக்க பகிரங்கமாக மறுத்திருந்த நிலையில் பைடனின் பிரித்தானிய பயணம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.