பிரிகோஜினை ரகசியமாக சந்தித்த புடின் – 3 மணிநேர கலந்துரையாடலின் பின் எடுக்கப்பட்ட முடிவு..!
ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின் வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு காலத்தில் புடினுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட பிரிகோஜின் புடினுக்கு எதிராக திரும்பியதைத் தொடர்ந்து, அவர் கொல்லப்படலாம் என்றும், புடின் துரோகிகளை மன்னிக்கமாட்டார் என்றும், ஆகவே, பிரிகோஜின் உயிருக்கு ஆபத்து உருவாகியுள்ளது என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியான ஐந்தாம் நாள், அதாவது, ஜூன் மாதம் 29ஆம் திகதியே, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், பிரிகோஜின் மற்றும் தளபதிகள் உட்பட 35 பேரை சந்தித்து பேசியதாகவும், மூன்று மணி நேரம் நிகழ்ந்த அந்த சந்திப்பின்போது, தளபதிகள் அனைவரும், நாங்கள் உங்கள் தளபதிகள், தொடர்ந்து உங்களுக்காகவே போர் செய்வோம் என புடினிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.