பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: 26 ரபேல், 3 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி (நாளை மறுதினம்) பிரான்ஸ் செல்கிறார். அப்போது இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
அந்த முன்மொழிவில் ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் கடற்படை விமானங்கள் மற்றும் நான்கு பயிற்சி விமானங்கள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் கடற்பகுதி பாதுகாப்புகளை எதிர்கொள்ள, தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த விமானங்களை வாங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதேபோல் மூன்ற ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களும் வாங்க வலியுறுத்தியுள்ளது. தற்போது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து மிக்-29எஸ் (MiG-29s) விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து ரபேல் நடால் விமானங்களையும் இயக்க வேண்டும் என கப்பற்படை விரும்புகிறது. மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் பிராஜெக்ட் 75-ன் பகுதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில், மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக இந்தியா செலவிட இருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை இறுதியில்தான் சரியான தொகை தெரியவரும். இந்தியா தொகையை மிகப்பெரிய அளவில் குறைக்க வலியுத்து என்றும், மேக்-இன் இந்தியா தயாரிப்புகளை கொண்டு உருவாக்க வலியுறுத்தும் எனவும் தெரிகிறது. முன்னதாக ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட பேச்சுவார்த்தை நடைமுறை தற்போதும் தொடர வாய்ப்புள்ளது. பாதுகாப்புப்படையின் முன்மொழி பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டடுள்ளது. இன்னும் சில நாட்களில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் இந்த முன்மொழிவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.