இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்!!
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடமான பர்வானூ என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கனமழையால் தெருக்கள் பொங்கி வழியும் நீர்வழிப்பாதைகளாக மாறிவிட்டன. பாலங்கள் அடித்துச் செல்லபட்டு, சாலைகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.
இதனால், அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். நிலச்சரிவு மற்றும் பல இடங்களில் வெள்ளம் காரணமாக சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா-கின்னூர் சாலையும் சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதால் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. அரசு அறிக்கையின்படி, இழப்பு மதிப்பீடு நடந்து வருவதாகவும், அது ரூ.3,000-4000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் இன்று முதல் கனமழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.