;
Athirady Tamil News

காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண் !! (PHOTOS)

0

‘கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார் அந்தப் பெண்.

செய்தியாளர்கள், கேமராக்கள் மற்றும் மைக்குகளால் சூழப்பட்ட சீமா குலாம் ஹைதர் தனது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் இருந்து செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் நம்பிக்கையுடன் பதிலளிக்கிறார். அருகில் அவரது காதலர் சச்சின் மீனா நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

நாட்டின் பெரிய செய்தி சேனல்களின் தொகுப்பாளர்கள், செய்தியாளர்கள் முதல் டஜன் கணக்கான யூடியூபர்கள் வரை சீமாவுடன் பேசுவதற்கு தங்கள் முறைக்காக காத்திருக்கிறார்கள்.

சீமாவின் நான்கு குழந்தைகளை வீட்டில் உள்ள கூட்டத்தினரிடையே எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். சில செய்தியாளர்கள் இந்தக் குழந்தைகளை ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கங்களை எழுப்ப ஊக்குவிக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில பெண்களும், சில இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சீமாவைச் சந்திக்க வருகிறார்கள். ஆசீர்வாதம் கொடுத்து, சீமாவின் கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து, அவருடன் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வீட்டில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களும் கேட்கின்றன. அதே நேரத்தில் சிலர் வீட்டில் உள்ள துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்று சொல்கிறார்கள்.

இந்த காட்சிகள் அனைத்தும் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ரபுபுராவில் உள்ள சச்சின் மீனாவின் வீட்டில் நடப்பவை. இருவரும் ஜாமீன் பெற்றதையடுத்து, இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிபிசி ஹிந்தி சேவைக்காக நாங்கள் காலை முதல் பலத்த மழைக்கு இடையில் சீமா குலாம் ஹைதர் மற்றும் சச்சின் மீனாவை சந்திக்கக் காத்திருந்தோம்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், கட்டிலில் அமர்ந்திருந்த சச்சினின் தந்தை நேத்ரபால் மீனா, கூப்பிய கைகளுடன் எழுந்து நின்று, “இப்போது எல்லாம் நலமாக இருக்கிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்று கூறுகிறார்.

சில மணி நேர காத்திருப்புக்குப் பிறகு சீமா, சச்சினிடம் பேச எங்களுக்கு நேரம் கிடைத்தது.

சுமார் இருபது நிமிட உரையாடலில், நட்பு – காதலில் தொடங்கி, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது, திருமணம், இந்து மதத்தில் சேந்தது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் இருவரும் பதிலளித்தனர்.


பாகிஸ்தானை சேர்ந்த சீமா, ஜகோபாபாத்தில் வசித்து வந்த குலாம் ஹைதர் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் இருவரும் கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர். 2019 ஆம் ஆண்டில், குலாம் ஹைதர் வேலை தொடர்பாக சவுதி அரேபியா சென்றார்.

இந்த நேரத்தில் தான் சீமாவும், சச்சின் மீனாவும் பேசத் தொடங்கினர். ஆன்லைன் விளையாட்டான பப்ஜிதான் இருவருக்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட பாலமாக இருந்தது.

இது குறித்து சீமா பேசியபோது, ​​“எங்கள் காதல் கதை பப்ஜி விளையாடுவதில் தொடங்கியது. சச்சின் ஏற்கெனவே நன்கு விளையாடப் பழகியிருந்தார். நான் அந்த விளையாட்டுக்குப் புதிய வரவு. இந்த விளையாட்டின் போது எனது பெயர் மரியா கான். சச்சின் எனக்கு ‘கேம் ரிக்வஸ்ட்’ அனுப்பியிருந்தார்.

பின்னர் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடிய போது எங்களது தொடர்பு எண்களைப் பகிர்ந்துகொண்டோம். சச்சின் ஆன்லைனில் கேம் விளையாட வந்தபோதெல்லாம், ‘குட் மார்னிங்’, ‘தும் பி ஆவோ ஜி’ (நீங்களும் விளையாட வாருங்கள்) என எனக்கு மெசேஜ் அனுப்புவது வழக்கம்,” என்றார்.
காதலாக மாறிய ஆழமான நட்பு

தொடர்ந்து பேசிய சீமா, ​​“மூன்று, நான்கு மாதங்கள் விளையாடிய பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். நான் அவருடன் வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு எங்கள் வீடு மற்றும் சுற்றுப் புறங்களைக் காண்பித்தேன். அவர் பாகிஸ்தானைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கும் இதே போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து ஒருவர் என்னிடம் பேசியது எனக்கு அத்தனை மகிழ்ச்சியை தந்தது.”

“முதலில் சாதாரணமாக பேசத் தொடங்கிய நாங்கள் பின்பு இரவு முழுவதும் பேசத் தொடங்கினோம். பின்னர் அது ஆழமான நட்பாக மாறி, காதலாக மலர்ந்தது.”

ஒரு கட்டத்தில் சீமா, ​​​​சச்சினை சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அது சீமாவுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

சீமா ஹைதர் கூறுகையில், “நான் பாகிஸ்தானை வெறுக்கிறேன் என்பதல்ல இதன் பொருள். நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவள். என்னுடைய குழந்தைப் பருவம் அங்கேயே கழிந்தது. எனது சகோதர சகோதரிகள், பெற்றோர் அனைவரும் அங்கு வாழ்ந்து வந்தவர்கள். என் பெற்றோரின் உடல்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

“வாழ்க்கை ஒரே ஒரு முறை கிடைக்கிறது. பின்னொரு நாளில் அது பறிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு குழந்தைப் பருவம். பின்னர் இளமைப் பருவம். அதன் பின் முதுமை, இறப்பு என அது நகர்கிறது. என் தந்தை ஒரு காலத்தில் உயிருடன் இருந்தார். ஒரு நாள் அவரது மரணத்தை என் கண் முன்னே பார்த்தேன். இந்த வாழ்க்கையில் அன்பு தான் முக்கியம். இதனால் தான் இறுதியாக நான் என் காதலைத் தேர்ந்தெடுத்தேன்.”

சீமா குலாம் ஹைதர் தனது காதலனைச் சந்திக்க நேபாளத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருந்தது.

இது குறித்து சீமா கூறுகையில், “நாங்கள் துபாயில் சந்தித்திருக்கலாம். ஆனால் சச்சினிடம் பாஸ்போர்ட் இல்லை. பாஸ்போர்ட் இல்லாமலேயே இந்தியர்கள் நேபாளத்திற்குச் செல்ல முடியும் என்பதை அறிந்தோம். எனவே நாங்கள் நேபாளத்தில் சந்திக்க முடிவு செய்தோம்,“ என்றார்.

சந்திப்பின் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயித்த பிறகு, சீமா நேபாளத்திற்கு சுற்றுலா விசா எடுத்து ஷார்ஜா வழியாக காத்மாண்டுவை அடைந்தார்.

“முதன்முறையாக நான் பாகிஸ்தானில் இருந்து மார்ச் 10, 2023 அன்று புறப்பட்டு மாலையில் காத்மாண்டு சென்றடைந்தேன். அது தான் எனது முதல் விமானப் பயணம். விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழுந்த போது எனது காதுகள் அடைத்துக்கொண்டன.“

“ஆனால் ஏன் காது வலித்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் காது வலிக்கிறது என என்னுடன் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டேன். விமானத்தில் பறக்கும் போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம் என்றும், சாதாரணமாகவே இது போல் வலி ஏற்படும் என்றும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.” என்கிறார் சீமா.

சச்சின் மீனா ஏற்கனவே காத்மாண்டுவில் சீமாவுக்காக காத்திருந்தார். இது குறித்து சச்சின் கூறுகையில், நியூ பஸ் பார்க் பகுதியில் உள்ள நியூ விநாயக் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்ததாகவும், அதற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

காத்மாண்டுவில் அவர்கள் இருந்த போது இருவரும் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் சீமாவின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளன. அதில் இருவரும் காத்மாண்டு தெருக்களில் சுற்றித் திரிந்ததைக் காணலாம். காத்மாண்டுவில் இருந்த போது அவர்கள் இருவரும் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

“மார்ச் 13 அன்று காத்மாண்டுவில் உள்ள பசுபதி நாத் கோவிலில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஒரு டாக்ஸி டிரைவரின் உதவியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. இதற்கு ஆதாரமாக எங்களிடம் வீடியோக்களும் உள்ளன. அப்போது நான் எனது சுயவிருப்பத்தின் பேரில் இந்து மதத்திற்கு மாறினேன். இது நானாக எடுத்த முடிவு. என்னை யாரும் வற்புறுத்தவில்லை,” என்கிறார் சீமா.

“குலாம் ஹைதர், (சீமாவின் கணவர்) சச்சின் மீனா என் மனதைக் கெடுத்துவிட்டதாக வீடியோவில் கூறுகிறார். இதை யாரும் செய்யவில்லை. நான் என் விருப்பப்படி வந்துள்ளேன். நான் சச்சினைக் காதலித்தேன். அந்தக் காதலின் அடிப்படையில் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டேன்.“

நேபாளத்தில் திருமணம் நடந்தது. ஆனால் சீமாவுக்கு கராச்சியில் நான்கு குழந்தைகள் இருந்ததால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. லாகூரில் உள்ள ஒரு தர்காவுக்குச் செல்வதாகக் கூறி சச்சினைச் சந்திக்க அவர் நேபாளம் வந்தார் என தற்போது கூறியுள்ளார்.

சீமா மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றார். ஆனால் அப்போது அவரால் பாகிஸ்தானில் இருந்ததாக உணர முடியவில்லை.

பின்னர் எப்படியோ இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. சீமா தனது குழந்தைகளுடன் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

​​“என்னிடம் அதிக பணம் இல்லை. என் பெயரில் ஒரு வீடு இருந்தது, அதை 12 லட்சம் ரூபாய்க்கு விற்றேன். அந்த பணத்தில் எனக்கும் என் குழந்தைகளுக்கும் நேபாள விசா கிடைத்தது. அதற்காக சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட்டேன்.“

இந்த முறை நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதே சீமாவின் எண்ணமாக இருந்தது. மார்ச் 10 ஆம் தேதி நேபாளத்தில் சச்சினை முதன்முதலில் சந்தித்ததால், இந்த தேதி தனக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று சீமா நம்பினார். இதனால், சீமா மீண்டும் மே 10ம் தேதியை பயணத்திற்கு தேர்வு செய்தார்.

​​“விமானம் புறப்படுவது, விமானப் பயணத்துக்காகத் தயாராவது, இணைப்பு விமானங்கள் போன்ற விவரங்கள் எனக்கு முன்கூட்டியே நன்றாகத் தெரிந்திருந்ததால் இரண்டாவது முறை நேபாளத்துக்கு வருவது எளிதாக இருந்தது. நான் மே 10 அன்று எனது குழந்தைகளுடன் அங்கிருந்து (பாகிஸ்தான்) புறப்பட்டு மே 11 காலை காத்மாண்டுவை அடைந்தேன். பின்னர் பொக்ராவுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினேன்.”

“12 ம் தேதி காலை ஆறு மணிக்கு, குழந்தைகளுடன் டெல்லிக்கு பேருந்தைப் பிடித்தேன். சச்சின் பெயரை என் கணவர் என்று எழுதிக் கொண்டேன். டிக்கெட் வழங்கும் அதிகாரிகளிடம் சச்சினும் போனில் பேசினார். அதன் பின் பல மணிநேரம் பயணித்து கிரேட்டர் நொய்டாவை அடைந்தேன்,” என சீமா தெரிவித்தார்.

இங்கே சீமாவுக்காக சச்சின் காத்திருந்தார். அதன் பிறகு அவரை ரபுபுராவில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் இந்த அறையை கிர்ஜேஷ் என்பவரிடம் இருந்து மாதம் ரூ.2,500 வீதம் சச்சின் வாடகைக்கு எடுத்திருந்தார்.

பொக்ராவில் இருந்து டெல்லிக்கு தினமும் காலையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 28 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இந்த பயணத்தில், இந்திய-நேபாள எல்லையில் அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்டாலும், இறுக்கமான பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால் இந்திய எல்லைக்குள் எளிதில் வரமுடிந்ததாக சீமா கூறினார்.

மேலும், ​​“சச்சின் தனது முகவரியை சரியாக எழுதிக்கொடுத்திருந்தார். பயணத்தின் போது அதிகாரிகள் பல்வேறு விசாரணைகளை அனைத்து பயணிகளிடமும் நடத்தினர். பயணிகளின் உடைமைகள் மற்றும் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு அதிகாரி அடையாள அட்டையை என்னிடம் கேட்டபோது, அது தொலைந்துவிட்டதாகத் தெரிவித்தேன். அப்போது தொடர் பயணம் காரணமாக எனது குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. என் மூத்த மகள் வாந்தி எடுத்தாள். அப்போது பயணிகளிடம் பரிசோதனை நடத்திய அதிகாரிகள் உண்மையில் என்மீது கருணை காட்டி உதவினர்,” என்றார்.

மனைவி, குழந்தைகளை மீட்டுத் தருமாறு சவுதி அரேபியாவிடம் குலாம் ஹைதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கணவர் குலாம் ஹைதரிடமிருந்து வாய்மொழியாக விவாகரத்து

சீமாவின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு சவுதி அரேபியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுபுறம், குலாம் ஹைதருக்கு தன்னை வற்புறுத்தி திருமணம் செய்துவைத்ததாகவும், அவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் சீமா கூறுகிறார். ஆனால், குலாம் ஹைதர், தங்களுக்கு இடையே விவாகரத்து என்று எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்.

இது குறித்து சீமா பேசுகையில், ​​“கடந்த 2013ம் ஆண்டு நான் ஒருவரை விரும்பினேன். இதை எனது குடும்பத்தினர் ஏற்கவில்லை. அதனால் குலாம் ஹைதருக்கு என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அப்போது எனக்கு வெறும் 17 வயதுதான் ஆகியிருந்தது,“ என்றார்.

தொடர்ந்து பேசிய சீமா, “பாகிஸ்தானில் கூட, 18 வயது சிறுமி எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறார். எனக்கு இன்று 27 வயது. என் வாழ்க்கையை என்னால் தீர்மானிக்க முடியும். நான் ஒரு பெண் என்பதால், ஒரு ஆணை விவாகரத்து செய்ய முடியாது.”

“எங்களுக்கு எழுத்துப்பூர்வ விவாகரத்து இல்லை. வாய்மொழியாக விவாகரத்து செய்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் வாய் வார்த்தை வேலை செய்கிறது. இந்தியாவில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முயற்சிப்பேன். இங்கேயே இருந்துவிட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெறவும் தயார்.” என்றார்.

பிபிசி உருது சேவையிடம் பேசிய, சீமாவின் மாமனார் மிர் ஜான் சக்ரானி, வீட்டை விட்டுச் சென்ற போது ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏழு தோலா (81.62 கிராம்) தங்கத்தை எடுத்துச் சென்றதாக சீமா மீது குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சீமா, “நான் இதைச் செய்யவில்லை. அவர்கள் அவ்வளவு பணமும் அந்தஸ்தும் உடையவர்கள் அல்ல. என் அம்மாவின் தங்கம் என்னிடம் உள்ளது. நான் என் காதிலும் என் கையிலும் நகை அணிந்திருக்கிறேன். வரதட்சணையாக நான் கொண்டு வந்த தங்கத்தை இங்கே கொண்டுவந்திருக்கிறேன். எனது அம்மாவின் அடையாளமாக இவற்றை நான் வைத்திருக்கிறேன். அவற்றை நான் விற்கவும் இல்லை,” என்றார்.

சீமா இந்தியாவுக்குள் நுழைந்த விதத்தை பார்த்து பலரும் அவர் பாகிஸ்தானின் உளவாளி என்று சந்தேகித்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தில் அவரது சகோதரர் வேலையில் இருப்பது, அவரிடமிருந்து நான்கு மொபைல் போன்கள் மீட்கப்பட்டது போன்றவை மக்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இந்த சந்தேகங்கள் குறித்து பேசிய சீமா, “நான் உளவாளி இல்லை. சச்சின் மீதான காதலில், பாஸ்போர்ட் வாங்க வீட்டிற்கு வெளியே அலைய ஆரம்பித்தேன்”

“நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள், அதிகம் படிக்காதவள். இருப்பினும், சில வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆங்கிலம் பேசத் தெரியும். அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டு வரி ஆங்கிலத்தில் பேசச் சொன்னால் திணறுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை.”

தொடர்ந்து பேசிய அவர், ​​“நான் இந்தியாவில் காவல்துறையிடம் எந்தப் பொய்யையும் சொல்லவில்லை. போலீசார் என்ன கேட்டாலும், அதற்குச் சரியான பதில்களைத் தான் அளித்திருக்கிறேன். 2022ல் எனது சகோதரர் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு மிகக்குறைந்த சம்பளம் தான் கிடைக்கிறது. மாதம் சுமார் 18,000 (பாகிஸ்தான்) ரூபாய் தான் சம்பளம்,” என்றார்.

மூன்று ஆதார் அட்டைகள் மற்றும் ஐந்து மொபைல்கள் குறித்த கேள்விக்கு, “எங்களிடம் ஐந்து தொலைபேசிகள் இருந்தன, அவற்றில் ஒன்று என்னுடையது. மீதமுள்ளவை எனது மூன்று குழந்தைகள் மற்றும் சச்சினுடையது. என் குழந்தைகள் போனில் விளையாடுகிறார்கள். இது தவிர, பாகிஸ்தான் நாட்டின் மூன்று அடையாள அட்டைகள் என்னிடம் இருந்தன, அதில் ஒன்று எனது தந்தைக்குச் சொந்தமானது. மற்றது, குலாம் ஹைதருடையது. இன்னொன்று என்னுடையது,” என்றார்.

இனிமேல் இந்தியாவில் வாழ விரும்புவதாகவும், சச்சினுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் தனது சகோதரிகளை நினைத்து கண்ணீர் வருவதாகவும் சீமா கூறுகிறார்.

“எனக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். பெரியவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. தங்கையை என் தம்பி பார்த்துக் கொள்வான். என் அப்பா போன பிறகு எனக்கு பாகிஸ்தானில் யாரும் இல்லை. இப்போது நான் சச்சினை மணந்துள்ளேன். அவர்கள் என் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள். என்னை மதிக்கிறார்கள். அது போதும் எனக்கு.”

தாயகம் திரும்புவது குறித்து கேட்டால் சீமா கோபப்படுகிறார். மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டால் அதற்குப் பதிலாக நான் இறந்துவிடுவேன் என்கிறார். “என் மரணம் இங்கேதான் நிகழும். நான் எந்த சூழ்நிலையிலும் திரும்பிச் செல்ல மாட்டேன்.” என்கிறார் அவர்.

சச்சின் மீனாவும் அதையே சொல்கிறார். ​​“நான் சீமாவை திருமணம் செய்து கொண்டேன். நான் சாகும் வரை அவர் இந்தியாவை விட்டுச் செல்ல விட மாட்டேன்,” என்றார்.

தற்போது ஜாமீன் கிடைத்ததை அடுத்து சீமாவும், சச்சினும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். மதங்கள், நாடுகளின் எல்லைகளைத் தாண்டிய இந்தக் காதல் கதை மேலும் எங்கு சென்றடையும் என்பது ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயமாகவே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.