சென்னை மாநகர் முழுவதும் இரவு நேர சோதனை- இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் அதிரடி!!
சென்னை மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்ற செயல்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அந்த வகையில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதன்படி இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை முழுவதும் உள்ள 102 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 306 இடங்களில் சோதனை நடைபெற உள்ளது. இந்த அதிரடி வேட்டையின் போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எப்போதும் வார இறுதி நாட்களில் போலீசார் இரவு நேர சோதனைகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெற உள்ள சோதனையை எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி குடித்து விட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுமுறை நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இது போன்ற சிறு வயதுக்காரர்களால் அதிக அளவில் விபத்துகள் நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டிசென்று விபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் 3 பேராக பயணிப்பதும் சென்னையில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்ற வாலிபர்கள் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சட்டம் -ஒழுங்கு போலீசாரும் சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் ரவுடிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது போலீசார் பழைய குற்றவாளிகளின் போட்டோக்களை வைத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் சென்னையில் குற்ற செயல்கள் குறையும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சிறப்பு சோதனையின் ஒரு பகுதியாக இன்று பகல் முழுவதும் ஒரு வழி பாதையில் செல்பவர்களை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கையால் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், சிறுவர்கள் அதிக அளவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.