;
Athirady Tamil News

63 வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட் திரையுலகம்!!

0

தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் இவர்களுடன் கைகோர்க்கும் விதமாக திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் இணையப்போகின்றனர். டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

வால்ட் டிஸ்னி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மிகப்பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்புடன் ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இந்த அழைப்பு விடப்பட்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத தனியார் திரைப்பட தயாரிப்புகளை தவிர, அமெரிக்காவில் எழுதி உருவாக்கப்படும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தும்.

இதனால் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” (Stranger Things) மற்றும் “தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்” (The Handmaid’s Tale) போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால், சில முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம். அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் உடனடியாக பாதிக்கப்பட போவதில்லை. ஆனால் மார்வெல் நிறுவன தயாரிப்பான பிளேட் (Blade) மற்றும் தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) போன்ற எதிர்கால வெளியீடுகள் தாமதமாகும்.

தொழிலாளர் மோதல்கள் தீர்க்கப்படும் வரை அவை நிறுத்தி வைக்கப்படலாம். வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எனப்படும் இணையவழி பொழுதுபோக்குகளில் கொரியாவிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும். ஆனால் ஹாலிவுட் தயாரிப்புகள் இடைநிறுத்தப்படும். இது போன்றதொரு வேலைநிறுத்தம் கடைசியாக 1960-ல் ரொனால்டு ரீகன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.