நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கள் முன்மாதிரியானவை. – அமைச்சர் மனுஷ!!
தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற தொழில் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழுகின்ற அனைவரும் தங்களுடைய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அதேவேளை, இனம், மொழி, மதம், நிறம் போன்ற அனைத்து விடயங்களையும் கடந்து இலங்கையர்களாக சவால்களை எதிர்கொள்ளுகின்ற போதே, இந்த நாட்டின் எதிர்காலத்தினை வளமானதாக மாற்றியமைக்க முடியும்.
இந்த நிலையில், மொழியின் பெயரால் அரசியல்வாதிகள் சிலரினால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் வெளியிடுகின்ற கருத்துக்கள் நிதானமானவையாக அமைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் கதை ஒன்றினை தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, குறித்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிடுகின்ற கருத்துக்கள் மிகவும் நிதானமானவை எனவும் அவ்வாறான பக்குவமே இந்த நாட்டிற்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.