;
Athirady Tamil News

பொது சிவில் சட்டத்தில் நிலைப்பாடு என்ன?: காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை!!

0

பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் உரையாற்றும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரது கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 2024-ல் வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க. இதனை தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கும் என அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்க முயற்சிக்கின்றன. பொது சிவில் சட்டம் குறித்த அரசின் ஒரு வரைவு அறிக்கை (draft) வரும் வரையில், அது குறித்து காங்கிரஸ் கருத்து எதுவும் கூறப்போவதில்லை என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒரு உயர்மட்ட ஆலோசனையை இன்று நடத்துகின்றனர். இதில் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா,மனிஷ் திவாரி, கே.டி.எஸ். துள்சி மற்றும் அபிஷேக் மனு சிங்க்வி உட்பட் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பொது சிவில் சட்டத்திற்கு முன்மொழிபவர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திருமணம், பரம்பரை சொத்து, மற்றும் தத்தெடுத்தல் போன்ற சிவில் விஷயங்களில் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறையின் 2016 ஜூன் 17 வெளியிட்ட அறிவுறுத்தலின்படி இந்திய சட்ட ஆணையம் இதனை ஆராய்ந்தது. பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது.

கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய சட்ட ஆணையத்திற்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சட்ட கமிஷன் அரசுக்கு ஆலோசனைகளை கூறலாமே தவிர அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி இதனை அமல்படுத்த கூறமுடியாது. இச்சட்டம் கொண்டு வர நாட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கிறது என அரசாங்கம் கருதினால், நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று இதனை கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பொது தேர்தல் நெருங்கும்போது, இது சம்பந்தமான விவாதங்கள் இன்னும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.