பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்!!
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டுச் சென்றனர்.
கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கிறது. இதேபோல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது, கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.