சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ – நாளை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை!!
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே, நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட்டில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த சூழலில் சம்பவ பகுதிக்கு வனத்துறையினர் தற்போது விரைந்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக நாளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அமாவாசை தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி செல்ல தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது