அமலாக்கத்துறை விசாரணை நிறைவு- வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது. விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம சிகாமணி வீட்டிற்கு புறப்பட்டனர். இதற்கிடையே, அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடியின் வங்க கணக்கில் இருந்த 41.9 கோடி ரூபாய் வைப்பு நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.