;
Athirady Tamil News

ஜனாதிபதி இல்லத்திலிருந்த பணம் தொடர்பில் விசாரணை!!

0

கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்துமீட்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பிரஜைகளின் சக்தி அமைப்பினால் (Puravesi Balaya) பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மீட்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பில் விசாரணை செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னதாக அறிக்கைகளை விடுத்திருந்தார்.

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து போராட்டகாரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம், தனக்கு ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைந்த ஒரு வர்த்தகரால் வழங்கப்பட்டதாகவும் , அந்தப் பணத்தை போராட்டத்தில் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்குத் தரவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய 2 ஆவது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

போராட்டகாரர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமித்ததையடுத்து இடம்பெற்ற களேபரத்தினால், நிதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இடம்மாறியுள்ளதாகவும், அதனால் நிதியில் பங்களித்தவர்களின் பெயர்களை வெளியிட முடியாத நிலையில் தான் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பணச் சலவைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, குறித்த விசாரணைகளின் சாராம்சத்தை சட்டமா அதிபருக்கு அனுப்ப உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.