;
Athirady Tamil News

மகனை கொல்ல கூலிக்கு ஆள் தேடிய தாய்: சாமர்த்தியமாக கைது செய்த அமெரிக்க காவல்துறை!!

0

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார். ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்றும் இது போன்ற கோரிக்கைகள் உண்மையிலேயே வந்தால் அந்த வலைதளத்தை நடத்துபவர்கள், காவல்துறையினரிடம் தகவல்களை அளித்து விடுவார்கள் என்றும் அப்பெண்ணுக்கு தெரியவில்லை. வார இறுதிக்குள் தனது மகனை கொல்ல வேண்டும் என்றும் அதற்காக கூலிக்கு ஒரு கொலைகாரன் வேண்டும் என அந்த வலைதளத்தில் தேடி வந்துள்ளார். மேலும் அவர் தனது மகனின் புகைப்படங்களையும் அவன் இருக்கப் போகும் சரியான இடத்தையும் அந்த வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார்.

உடனே அந்த இணையதளத்தின் ஆபரேட்டர்கள், காவல்துறையினரிடம் தெரிவித்தனர். காவல்துறையினர், இணையதளத்தில் கோரிக்கை வைக்க பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரியை (IP address) ஆய்வு செய்தனர். கோரிக்கை வைத்த அந்த பெண்ணும் அதே கணினியை பயன்படுத்துவதை உறுதி செய்து கொண்டனர். இதற்கு பிறகு தன்னை கூலிக்கு கொலை செய்யும் கொலையாளியாக காட்டி கொண்ட ஒரு புலனாய்வாளர், அப்பெண்ணைத் தொடர்பு கொண்டார். ரூ.2,40,000க்கு ($3,000) கொலை செய்ய அவர் ஒப்புக்கொள்வதாக அப்பெண்ணிடம் நடித்துள்ளார்.

இதன் மூலம் குற்ற முயற்சியை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சிக்கான கோரிக்கை விடுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு புறம்பான வழியில் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.12,00,000 ($15,000) பிணையம் செலுத்தவும் அவரது குழந்தையிடமிருந்து விலகி இருக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அச்சிறுவன் தற்போது பாதுகாப்பாக உறவினர்களுடன் இருக்கின்றான். அப்பெண் எதற்காக தன் மகனையே கொலை செய்ய முற்பட்டார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.