;
Athirady Tamil News

எங்கள் இதயம் நொறுங்குகிறது.. மணிப்பூர் கொடூரம் குறித்து வேதனை தெரிவித்த அமெரிக்க தூதர்!!

0

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்பு நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த தருணத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.