தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!!
திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சிநகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து பேசியதாவது:- திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலில் வந்தது கொங்கு மண்டலத்துக்குத்தான். கொங்கு மண்டலத்தில் நடக்கும் முன்னெடுப்புகளை மிக கூர்மையாக முதலமைச்சர் கவனித்து வருகிறார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் நிலத்தை கொடுத்தால் தொழிற்பேட்டைகள் அமைக்க வசதியாக அமையும். தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் 2 வாரங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்தியா வளர்ந்து வருகிறது.
வெளிநாட்டினர் வந்தால் அவர்கள் முதலில் கதவை தட்டுவது தமிழ்நாட்டைத்தான். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் முன்னேற்றத்துக்கான ஆட்சியாகவே தமிழகம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை ஜவுளித்தொழில், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கி வருகிறோம். ஜவுளித்தொழிலில் தொடர்ந்து முதன்மையாக இருக்கவும், அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கு டெக்னிக்கல் டெக்ஸ்டைல் அதாவது தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.நிலம் வழங்கினால் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க தயாராக உள்ளோம். முதலமைச்சரின் ஆதரவு திருப்பூருக்கு எப்போதும் நிச்சயம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.