உலக அளவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்- பிரதமர் மோடி!!
நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொளி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக இன்று 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொளி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர இது ஒரு சிறந்த வாய்ப்பு. நாட்டின் பெயரைப் பிரகாசிக்கச் செய்து அதைக் காட்ட வேண்டும். மேலும், 9 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. 1947-ல் இந்த நாளில்தான் (ஜூலை 22) மூவர்ணக்கொடி தற்போதைய வடிவத்தில் அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாடு வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும்போது, நீங்கள் அரசுப் பணியில் சேர இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அடுத்து வரப்போகும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து இந்திய குடிமக்களும் உறுதிபூண்டுள்ளனர். உலக நாடுகளின் கண்கள் இந்தியாவை நோக்கியே உள்ளன.
கடந்த ஆட்சியில் நமது வங்கித்துறை அழிவை சந்தித்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. உலக அளவில் இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது. இது இளைஞர்களின் கடின உழைப்பின் பலன். நியமனக் கடிதம் பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார். நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 44 இடங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நிதி, தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, அணுசக்தி துறை , ரெயில்வே தணிக்கை மற்றும் கணக்கு துறை, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப, இந்தியாவில் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாக இதன் மூலம் பொறுப்பு ஏற்கின்றனர்.
மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், எல்.டி.சி., ஸ்டெனோ, பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. பணி வாய்ப்புக்கான தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தொழில் நுட்பம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பிரதமரின் இலக்கு ஆகும். சென்னையில் நடைபெற்ற இந்த பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.