படிப்பில் ஜீரோ; விவசாயத்தில் ஹீரோ: தக்காளியால் கோடீசுவரரான தெலுங்கானா விவசாயி!!
விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டமடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வருட தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை கோடீசுவரராக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தில் வசிப்பவர் மகிபால் ரெட்டி, விவசாயி. சிறு வயதில் அவரது மனம் படிப்பில் ஈடுபடவில்லை. அவரால் 10ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன்பிறகு படிப்பில் நாட்டமில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டார். தக்காளியுடன் ரெட்டி நெல் சாகுபடியும் செய்தார். ஆனால் நெல் சாகுபடியில் லாபம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தக்காளி சாகுபடியை தொடங்கினார். இவர் 8 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார். விளைச்சல் அறுவடைக்கு தயாரானதும் ஜூன் 15ல் சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு தக்காளியை விற்று கோடீசுவரரானார். ஒரு மாதத்தில் சுமார் 8,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார்.
சீசன் முடிவதற்குள் சுமார் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டப்போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சந்தையில் தக்காளி வரத்து போதுமான அளவு இல்லை. அதனால் ஐதராபாத்திற்கு தக்காளியை அனுப்ப ஆரம்பித்தார். அங்கு தக்காளியை கிலோ ரூ.100க்கு விற்று 15 நாட்களில் சுமார் ரூ.1.25 கோடி சம்பாதித்துள்ளார். ரெட்டி ஒரு ஏக்கர் பயிரில் ரூ.2 லட்சம் செலவழித்து, தனது பயிரை தரமானதாக மாற்றினார். மொத்த சாகுபடிக்கு ரூ.16 லட்சம் செலவானதாக தெரிவித்தார். 40% பயிர் இன்னும் வயலில் எஞ்சியுள்ளது என்றும் அதுவும் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று ரெட்டி கூறினார். பட்டதாரிகள் பலர் வேலை தேடி அலைவது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில், 10ம் வகுப்பு கூட தேர்ச்சியடையாத மகிபால் ரெட்டி, விவசாயம் செய்து கோடீசுவரராகி இருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.