;
Athirady Tamil News

வாட்டும் வெப்பம், மக்கள் தவிப்பு: வரலாற்றில் பதியும் ஜூலை மாதம்!!

0

நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில், “இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே ஜூலை 2023 மாத வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும்” என தெரிகிறது. தொழில்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019-ஐ பதிவாகியிருந்தது. 2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதிக்கிறது. ஜூலை மாதத்திற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கமாக 16 டிகிரி செல்சியஸ் எனும் அளவில்தான் இருக்கும். ஆனால் இந்த ஜூலையில் அது 17 டிகிரி செல்சியஸிற்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. “நமது புவியில் இதே போன்ற அதிக வெப்ப பதிவுகளை ஆராய்ந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் ” என்று லெய்ப்சிக் பல்கலைகழகத்தின் வானிலையியல் ஆய்வாளர் கூறினார். பனிக்கட்டிகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கிடைக்கும் பதிவுகளில் இருந்து 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை என்று தெரிகிறது.

கிரேக்கத் தீவான ரோட்ஸ், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள், வடமேற்கு சீனா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அதிக வெப்பம் சமீப காலங்களில் மிகவும் பேசுபொருளானது. கடல் நீர் மட்டுமல்லாது உலகின் குளிர்ச்சியான அண்டார்டிகா பனி பிரதேசத்திலேயே வெப்பநிலை உயர்ந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.