;
Athirady Tamil News

11 பெண் துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு!!

0

கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும். இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா செல்லக்கூடிய தமிழக மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகளும் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். இந்நிலையில் பருவமழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வந்தது. அதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கும் கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்டது. பருவமழைக்கால லாட்டரி விற்பனை திட்டத்தில் விற்பனைக்காக 27 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. பம்பம் பரிசு 10 கோடி ரூபாய் என்பதால் லாட்டரி சீட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் பருவ மழைக்கால லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) வெளியிடப்பட்டது. அதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல்இருந்தது.

இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது. மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அவர்கள், சம்பவத்தன்று ஒரு இடத்தில் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், லாட்டரி சீட்டு வாங்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஒரு டிக்கெட்டின் விலை 250 ரூபாய் என்று கூறினார். இதனைக்கேட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்தனர்.

அதன்படி 9 பேர் தலா 25 ரூபாயும், ஒருவர் மட்டும் 50 ரூபாயும் போட்டு லாட்டரி டிக்கெட் வாங்கினர். இறுதியில் அவர்களுக்கே பம்பர் பரிசான 10கோடி ரூபாய் விழுந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பம்பர் பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பெண் துப்புரவு பணியாளர்கள் குழு, இதற்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.