பறக்க முயன்ற ஐவர் சிக்கினர் !!
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
போலி கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விமானத்தின் கடைசி வாயிலில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஆவார். விமான நிலைய அனுமதிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அதிகாலை 04.55க்கு கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் ஊடாக தோஹா கட்டாருக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரியாவுக்கு செல்லும் வகையில், விமானத்துக்குள் ஏறுவதற்கான கடைசி வாயிலுக்கு வந்துள்ளார்.
மேலும் நான்கு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் வசிப்பவர்கள் ஆவர். அவர்கள், திங்கட்கிழமை (31) காலை 07.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-101 மாலைதீவுக்கு சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு தப்பிச் செல்வதற்காக கடைசி வாயிலுக்கு வந்துள்ளனர்.
ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் அளித்த அனைத்து ஆவணங்களையும் மறு ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு ஆய்வுப் பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் இருந்த கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.