;
Athirady Tamil News

குர்ஆன் எரிப்பதை தடை செய்ய டென்மார்க் பரிசீலனை!!

0

பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது.

எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கோபன்ஹேகன் நகரின் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்கள் உட்பட சில சம்பவங்களில் தலையிட சட்டப்பூர்வ வழிகளை டென்மார்க் தேடிக் கொண்டிருக்கிறது.

ஸ்வீடனின் பிரதமரும் இதேபோன்ற செயல்முறைக்கான பணிகள் அங்கு தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான் குர்ஆன் எரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போராட்டங்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியதை அடுத்து, இரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

“பிற நாடுகள், கலாச்சாரங்கள், மதங்கள் அவமதிக்கப்படும் சில போராட்டங்களில் தலையிடுவதை அரசு ஆராய விரும்புகிறது. இது இது போன்ற போராட்டங்கள் டென்மார்க்கின் நன் மதிப்பிலும், பாதுகாப்பிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் “அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தின் கட்டமைப்பிற்குள்ளாகவும், கருத்து சுதந்திரம் மிகவும் பரந்த நோக்கத்தை கொண்டுள்ளது என்ற உண்மையை மாற்றாத வகையிலும்” திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

இந்த சர்ச்சைக்குரிய போராட்டங்கள் டென்மார்க்கின் சர்வதேச நற்பெயரில் ஏற்படுத்திய தாக்கத்தை வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத நூல்களை எரிப்பதற்கு ஏற்கெனவே தெரிவித்த கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

“மற்ற நாடுகளின் பண்பாடுகள், மதங்கள் மற்றும் மரபுகளை அவமதிக்கும், இழிவுபடுத்தும் ஒரு நாடாக டென்மார்க்கை பார்க்கும்” நிலையை இந்தப் போராட்டங்கள் தந்திருக்கின்றன என்றும் வெளியுறுவுத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த வாரம் இரண்டு டேனிஷ் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் கோபன்ஹேகனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியே குர்ஆனை எரித்தனர்.

இதேபோல ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெளியிட்டிருக்கும் மற்றொரு அறிக்கையில், இதேபோன்ற செயல்முறை ஏற்கனவே ஆராய்பப்பட்டு வருவதாகவும், அவர் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுடன் இது தொடர்பாகப் பேசி வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் ஏற்கனவே சட்ட நிலைமையை ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டோம். நமது தேசிய பாதுகாப்பையும், ஸ்வீடன் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஸ்வீடன் மக்களின் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கருத்தில் கொள்வதற்காக இதைச் செய்கிறோம்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு அறிக்கைகளும் சமீபத்திய வாரங்களில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் ஸ்வீடனில் வசிக்கும் ஈராக்கிய கிறிஸ்தவ அகதி ஒருவர், ஸ்டாக்ஹோமின் மத்திய மசூதிக்கு வெளியே குர்ஆனின் பிரதியை எரித்தார்.

கடந்த வாரம் இரண்டாவது முறையாக குர்ஆனை எரிக்க அந்த நபருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஸ்வீடன் தனது தூதரக ஊழியர்களை பாக்தாத்தில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் இரண்டு டேனிஷ் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் கோபன்ஹேகனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியே குர்ஆனை எரித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.