செஸ் போட்டியில் கலக்கும் 2-ம் வகுப்பு மாணவன்- சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம் என்கிறார்!!
புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார்.
அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார். பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது: செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்