பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரை மாற்றக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார். அவரின் குழந்தைகள் இந்த அரசு பள்ளியில் படிக்காத நிலையில் அவர் அரசியல் கட்சியில் உள்ளதால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது தெரிய வந்தது.
எனவே அவரை மாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு இன்று காலை திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களும் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி விடுமுறை என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.