அறநிலையத்துறை வேலைக்கு நேர்முகத்தேர்வு மூலம் எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்- அமைச்சர் அறிவிப்பு!!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 8 கோவில்களிலும் ஒரு வேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின் படி 2 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒரு வேளை அன்னதானத் திட்டமும் செப்டம்பர் மாதத்திற்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.
ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் இதுவரை திருச்செந்தூர், பெரியபாளையம், பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, சமயபுரம், மருதமலை, சிறுவாபுரி, மேல்மலையனூர் உள்ளிட்ட 15 கோவில்களில் ரூ.1,495 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்தாண்டு மயிலாப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, பேரூர் ஆகிய 5 இடங்களில் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை மற்றும் திருவானைக்காவலில் நடத்தப்படவுள்ள மகா சிவராத்திரி விழா குறித்து விவாதிக்கப்பட்டது.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திடும் வகையில் ரோவர் கருவி மூலம் இதுவரை ரூ.1,34,547 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த 150 அர்ச்சகர்களை கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக மாதம் ரூ.6,000 என்ற ஊக்கத்தொகையுடன் நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் பணி நியமனங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்ததி தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவருமே நிரந்தர பணியாளர்கள் ஆக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.