35 முறை தோல்வி.. கடைசியில் வெற்றி: மனம் தளராத முயற்சியால் இன்று ஐஏஎஸ் அதிகாரி!!
நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.
அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை கதை முன்னேற துடிப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் அரியானாவை சேர்ந்த விஜய் வர்தன். இவர் அரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்தார். பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுத விரும்பினார்.
கடினமான தேர்வான அதற்கு தயாராவதற்காக டெல்லி சென்றார். அப்பொழுதே அவர் சுமார் 35 முறை பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார். ஆனாலும் மனம் தளரவில்லை. மீண்டும் முயன்று யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி 2018ம் வருடம் 104வது இடத்தை பிடித்து வெற்றி கண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் அத்துடன் திருப்தி அடையவில்லை. தனது வெற்றி தோல்விகளை ஆராய்ந்த விஜய் வர்தன், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.
மீண்டும் அந்த தேர்வை எழுதி 2021ல் தேர்ச்சி பெற்று, தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார். தோல்விகள் அனைத்தும் அவரது நம்பிக்கையை குறைக்கவில்லை. தனது இலக்கில் கவனம் செலுத்தி, தனது திறமைகளை மட்டுமே நம்பினார். அவரது விடாமுயற்சியின் விளைவு, அவர் இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். “எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” என்பதுதான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறும் அறிவுரை.