;
Athirady Tamil News

அரியானா கலவரத்தை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் போராட்டம்!!

0

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு ஒருவர் பலியானார். இதன் காரணமாக அரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. என்றாலும் நேற்று இரவு சில இடங்களில் கடைகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. குருகிராம் 70-வது செக்டார் பகுதிகளிலும் நேற்று இரவு பல கடைகள் சூறையாடப்பட்டன.

கலவரம் தொடர்பாக இரு மாவட்டங்களிலும் 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அரியானா கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஆர்வலர்கள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியால், டெல்லியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், ஆர்வலர்களின் போராட்டத்தால் கிழக்கு டெல்லி முதல் நகரத்தின் மத்திய பகுதிகளை இணைக்கும் விகாஸ் மார்க் பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையை கண்காணிக்க போலீசார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ” நிர்மான் விஹார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள ரெட் லைட் பகுதியில், இன்று காலை 8 மணி முதல், விகாஸ் மார்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. காசியாபாத் அல்லது டெல்லி-மீரட் இ-வே வழியாக வரும் பயணிகள் ஐடிஓ தேசிய நெடுஞ்சாலை-24 ஐ வழியாக செல்கின்றனர்.

விவேக் விஹாரிலிருந்து வருபவர்கள் ஐடிஓக்கு நாலா சாலை வழியே செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியை ஒட்டியுள்ள அரியானாவின் சில மாவட்டங்களில் நடந்த வன்முறையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் அனைத்து முக்கிய இடங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் போலீஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.