பெற்ற தாயை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த மகன் – வெள்ள நிவாரணப் பணியில் நெகிழ்ச்சி!!
சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் எனும்படியான சம்பவங்கள், சில நேரம் நிஜ வாழ்விலும் நிகழத்தான் செய்கின்றன. சினிமா கதையை ஒத்த அப்படியொரு உணர்வுபூர்வமான நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.
இந்த மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஜக்ஜித் சிங். இவர் சிறு குழந்தையாக இருந்தபோதே அவரது பெற்றோர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று சொல்லப்பட்டு வந்தது.
தான் பிறந்து ஆறாவது மாதத்தில் இருந்து தந்தை வழி தாத்தா – பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட ஜக்ஜித் சிங், தனது பாட்டியே தன் தாய் என்ற புரிதலுடன் வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வாழ்வில் திடீர் திருப்பமாக, இன்ப அதிர்ச்சியாக ஓர் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆம்… தான் இதுநாள்வரை இறந்துவிட்டதாக நினைத்திருந்த தாய் ஹர்ஜித் கவுரை, 35 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென சந்தித்துள்ளார் ஜக்ஜித் சிங்.
உணர்வுபூர்வமான ஒரு சினிமா கதையை போன்ற தாய் -மகனின் இந்த சந்திப்பு இருவருக்கும் சிறப்பு மிக்கதாக அமைந்திருந்தது. சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் இருவரும் நிறைய பேசிக் கொண்டனர்.
நீண்ட கால பிரிவின் துயரும், மீண்டும் இணைந்ததால் உண்டான மகிழ்ச்சியும் இருவரின் ஆரத்தழுவலில் பிரதிபலித்தது. தாய் -மகனின் உணர்ச்சிகரமான சந்திப்பு காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திருப்புமுனையை ஏற்படுத்திய பாட்டியாலா பயணம்
பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட காடியன் தாலுகாவில் வசித்து வருகிறார் ஜக்ஜித் சிங். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தன்னார்வ அமைப்பின் மூலம் உதவிகள் புரிந்து வரும் அவர், இந்தப் பணிக்காக அண்மையில் பாட்டியாலாவுக்கு பயணித்திருந்தார்.
அங்குதான் அவர் தனது தாயை சந்தித்தார். தான் சிறு குழந்தையாக இருந்தபோது தனது தாய் இறந்துவிட்டதாக எண்ணியிருந்த சிங்கிற்கு, 35 ஆண்டுகளுக்கு பிறகு. அவரை நேரில் சந்தித்த அந்த கணம் அதிர்ச்சியாக இருந்தது.
“வாழ்க்கை தந்த வலிகளால் எனது இதயம் கல்லாகி போய் இருந்தது. ஆனால் என் அம்மாவை நேரில் தரிசித்த அந்த தருணத்தில் என் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கடந்த 35 ஆண்டுகளில் தான் இப்படி அழுததில்லை” என்று தனது கடந்த கால துயர வாழ்க்கையை நினைவுகூருகிறார் ஜக்ஜித் சிங்.
என் அம்மாவை நேரில் தரிசித்த அந்த தருணத்தில் என் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது. கடந்த 35 ஆண்டுகளில் இப்படி அழுததில்லை என்கிறார் ஜக்ஜித் சிங்.
“நான் சிறு குழந்தையாக இருந்தபோது, எனது பெற்றோர் கார் விபத்தில் இறந்துவிட்டனர் என்று சொல்லியே வளர்க்கப்பட்டேன். ஆறு மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே எனது தாத்தா – பாட்டி தான் என்னை வளர்த்து ஆளாக்கினர்.
என் தாத்தா, பஞ்சாப் -ஹரியானா ஒருங்கிணைந்த மாநிலங்களாக இருந்தபோது பஞ்சாப் மாநில காவல் துறையில் போலீசாக பணியாற்றி வந்தார். ஹரியானா மாநிலம் உருவான பிறகு அங்கு அவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்” என்றும் தனது கடந்த கால வாழ்க்கையை நினைவுகூருகிறார் அவர்.
எனது தந்தை கனரக வாகனங்களை கையாளும் பணியை மேற்கொண்டு வந்ததாக உறவினர்கள் கூறுவர். அவர் இறந்த பின், தாத்தாவும் பணிஓய்வு பெறவே, நாங்கள் காடியனுக்கு வந்துவிட்டோம்.
இதேபோன்று, நான் சிறு குழந்தையாக இருந்தபோதே, எனது தாய் இறந்துவிட்டார் என்று உறவினர்கள் கூறி வந்தனர். எனது பாட்டியை தாய் போல் எண்ணி அவரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தேன் என்றும் தனது குழந்தைப் பருவம் குறித்து கூறுகிறார் ஜக்ஜித் சிங்.
சிறு குழந்தையாக இருந்தபோது, எனது பெற்றோர் கார் விபத்தில் இறந்துவிட்டனர் என்று சொல்லியே வளர்க்கப்பட்டேன் என்கிறார் ஜக்ஜித் சிங்
மௌனம் கலைந்த தாத்தா
தாத்தா -பாட்டியை பெற்றோராக எண்ணி வாழ்ந்து வந்த ஜக்ஜித் சிங்கிற்கு, அவரது பாட்டி இறந்த பிறகு அவரின் அப்பா- அம்மா குறித்து தெரிய வந்தது.
“என் பாட்டி காலமான பிறகு ஒரு நாள், எனது குடும்ப உறுப்பினர்களின் பழைய புகைப்படங்கள் என் கண்களில் பட்டன. அந்த புகைப்படங்களுக்குள் ஒளிந்திருந்த உண்மைகள் குறித்து தாத்தாவிடம் கேட்டேன். அப்போதுதான் அவர் நீண்ட கால மெளனத்தை கலைந்து, எனது பெற்றோர் குறித்த உண்மைகளை என்னிடம் கூறினார்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஜக்ஜித் சிங்.
“ஐந்து ஆண்டுகளுக்கு முன், தாத்தா -பாட்டி காலமான பின், மற்றொரு உண்மை எனக்கு தெரிய வந்தது. எனது அம்மா இறக்கவில்லை. நான் சிறுபிள்ளையாக இருந்தபோது சில காரணங்களுக்காக அவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்ற உண்மையை அறிந்தேன்” என்றும் கூறினார் அவர்.
“என்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தா -பாட்டி இறந்துவிட்டனர். அதன் பிறகும், எனது நண்பர்கள் அவர்களின் பெற்றோர் மீது செலுத்தும் அன்பை காணும் போது என் கண்களில் நீர் வழியும்” எனவும் உணர்ச்சி ததும்ப கூறுகிறார் ஜக்ஜித் சிங்.
இதனிடையே, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஜக்ஜித் சிங் அண்மையில் பாட்டியாலா சென்றிருந்தார். அப்போது அங்கு வசித்து வரும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர், ஜக்ஜித் சிங்கின் தாய் வழி தாத்தா -பாட்டி, போஹர்பூர் கிராமத்தில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவரிடம் கூறினார்.
இதையடுத்து, தன் தாய்வழி தாத்தா -பாட்டியை தேடி போஹர்பூர் கிராமத்துக்கு பயணித்தார் ஜக்ஜித் சிங். அங்கு தனது தூரத்து உறவினரான சுர்ஜித் சிங்கிடம், தனது தாய் வழி தாத்தா -பாட்டி குறித்து கேட்டறிந்தார்.
அவர் அளித்த தகவலின்படி, போஹர்பூரில் இருந்த தனது தாத்தா -பாட்டி வீட்டை அடைந்தார் ஜக்ஜித் சிங். வீட்டின் கதவை தட்டியதும் முதியவர் ஒருவர் கதவை திறந்தார். அவருடன் மூதாட்டி ஒருவரும் இருந்தார். அவரிடம் தம்மைப் பற்றி தகவல்களை விரிவாக கூறாமல், தனது தாய் ஹர்ஜித் கவுர் குறித்து கேட்டறிந்தார்.
ஜக்ஜித் கேட்டதை கண்டு முதலில் சந்தேகமடைந்த அவரின் தாய் வழி பாட்டி, அதன் பின்னர் தனது மகள் குறித்த கடந்த கால உண்மைகளை அவரிடம் கொட்டித் தீர்த்தார்.
ஹரியானா மாநிலம், கர்னாலில் தனது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர்களுக்கு சோனு என்ற மகனும் இருந்தான் என்று ஜக்ஜித் சிங்கிடம் அவரின் பாட்டி கூறினார்.
அதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஜக்ஜித் சிங், “நான் தான் அந்த தங்க மகன்” என்று தன் பாட்டியிடம் கண்ணீர் மல்க கூறினார்.
என் அம்மாவை பற்றி பாட்டி சொன்ன வார்த்தைகள், ஒட்டுமொத்த சூழலையும் தலைக்கீழாக மாற்றியது. என் தாயை உடனே சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன் என்று உணர்ச்சி ததும்ப கூறுகிறார் ஜக்ஜித்.
தன் அம்மாவை சந்தித்த நாள், வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது என்று உணர்ச்சி ததும்ப கூறுகிறார் ஜக்ஜித் சிங்.
அடுத்த நாள் எனது அம்மாவை நேரில் சந்தித்தேன். அன்றைய நாள் இரவு என் வாழ்வின் மிக நீண்ட இரவாக அமைந்தது. உணர்வுபூர்வமான அந்த சந்திப்பின்போது நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை. மாறாக அழுது கொண்டே இருந்தோம்” என்று பல ஆண்டுகள் கழித்து தன் தாயை சந்தித்து குறித்து விவரிக்கிறார் ஜக்ஜித் சிங்.
என் தாயை பற்றிய உண்மை பல ஆண்டுகள் கழித்து எனக்கு தெரிய வந்தாலும், அவர் எந்த சூழ்நிலையில் என்னை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும், அது குறித்தெல்லாம் அவரிடம் எதையும் கேட்கவில்லை. அவருக்கும் என் மீது எந்த வருத்தமும் இல்லை.
“35 ஆண்டுகளாக என்னை விட்டு பிரிந்திருந்தது என் அம்மாவுக்கு கடும் மன வலியை கொடுத்திருக்கும். அவருடைய ஆசிர்வாதத்தால் தான் வாழ்வில் நான் வெற்றி அடைந்திருக்கிறேன். அவருடைய அன்பு தான் என்னை இன்று அவரிடம் சேர்த்துள்ளது” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் ஜக்ஜித் சிங்.
பஞ்சாபின் பிற பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகள் இருப்பதாக கூறுகிறார் ஜக்ஜித் சிங். அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தங்களால் நிவாரணம் அளிக்க முடியும் என்று கூறும் அவர், கடவுளின் அருள் மற்றும் தன் தாயின் பிரார்த்தனையால் மட்டுமே இது சாத்தியமானது என்கிறார்.