மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியுள்ளது!!
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (02) அறிவித்தது.
மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய கப்பல் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் விடயத்தை துரிதப்படுத்தினால், மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது
அத்தகைய மின் பிறப்பாக்கிகள் அமைந்துள்ள கப்பல்கள் Power Ship என அழைக்கப்படுகின்றன.
துருக்கி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான அத்தகைய கப்பலில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு ரவி கருணாநாயக்க 2019 ஆம் ஆண்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையில் பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தார்.
அந்த காலப்பகுதியில் வெசாக் பண்டிகைக் காலத்தில் கூட மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து இதற்கான யோசனை முன் வைக்கப்பட்டிருந்தது.
துருக்கி நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அந்த திட்டம் கைகூடாவிட்டாலும் நாடு இருளில் மூழ்கவில்லை..
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற இந்த கலந்துரையாடலின் போது, ஏதோ ஒரு இடத்தில் துருக்கியின் Power Ship தொடர்புபட்டிருக்கலாம்.
அந்த கலந்துரையாடலுக்கு சமாந்திரமான ஒரு யோசனையை இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த மாதம் 21 ஆம் திகதி முன்வைத்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இதன் மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்தை 15 வீதத்தால் குறைப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டமை ஊடாக இலங்கை மின்சார சபை, தனது செலவுகளுக்கு அமைய கட்டணத்தை தீர்மானிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஆவணத்திற்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு 500 கிகாவாட் மணித்தியால மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இது எவ்வளவு காலத்திற்கு என்பது கூட அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை மின்சார சபை கடந்த ஜூன் மாதத்தில் 3 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என யோசனை முன் வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அது 15 வீத கட்டண குறைப்பாக அமைய வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதன்போது, வருடத்தின் இறுதி 6 மாதங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த செலவீடுகளில் 33 பில்லியன் ரூபாவை குறைப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உண்மையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடுகளை மேற்கொண்டிருந்ததால் இலங்கை மின்சார சபை அதற்கு கட்டுப்பட நேரிட்டது.
இவ்வாறு குறைக்கப்பட்ட 33 பில்லியன் ரூபா இந்த வருடம் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படக்கூடிய நட்டம் என பொது முகாமையாளர் இந்த ஆவணத்தில் எதிர்வு கூறியுள்ளார்.
நாட்டின் நாளாந்த மின்சார பயன்பாடு 10 கிகாவாட் 10 மணித்தியாலங்கள் குறைந்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களிடமும் 10 கிகாவெட் மணித்தியால மின்சாரம் உள்ளது.
கட்டுப்பாடுகள் ஏற்பட்டால் அதனை ஈடு செய்வதற்கான மின்சாரம் இருந்தும் கூட அதனை மூடி மறைத்து, கட்டண திருத்தத்திற்கு முயற்சிப்பது நல்லாட்சிக் காலத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போன Power Ship திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவா?